வரலாற்று சிறப்புமிக்க அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த சாய் பல்லவி..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
சாய் பல்லவி
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. முதல் படத்திலேயே மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
பின், தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்தார். தனக்கென்று தனி இடத்தையும் உருவாக்கினார். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
பாலிவுட்
அமீர் கான் மகன் ஜுனைத் கான் நடிப்பில் வெளியான ஏக் தின் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் கால்பதித்தார். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக இவர் நடிப்பில் ராமாயணா திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2026 தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய படங்கள்
ராமாயணா மட்டுமின்றி தமிழில் ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாரி 2 திரைப்படத்திற்கு பின் மீண்டும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க மம்மூட்டி, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
மேலும், இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
அண்ணாமலையார் கோவில்
இந்நிலையில், நடிகை சாய் பல்லவி இன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. பின், ரசிகர்கள் சாய் பல்லவியிடம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.






