Welcome To The Jungle: திரை விமர்சனம்

அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, திஷா பதானி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள Welcome To The Jungle இந்தி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம் வாங்க.
கதைக்களம்
பெரிய பணக்காரரான சின்ஹா கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற, பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய தோல்வியடைய ஒரு படத்தை எடுக்க ஆரம்பிக்கிறார்.
சுமார் ரூ.2000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் அந்த படத்திற்கு பரேஷ் ராவல் மற்றும் ராஜ்பால் யாதவ் இருவரும் இயக்குநர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
போஜ்புரியில் மார்க்கெட் சரிந்த நடிகரான அக்ஷய் குமார் இப்படத்திற்கு ஹீரோவாகவும், அவரது முன்னாள் காதலி திஷா பதானி மற்றும் சின்ஹாவின் மகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஹீரோயின்ஸ் ஆகவும் நடிக்க உள்ளனர்.
இவர்கள் மட்டுமின்றி டான் சகோதரர்களான சுனில் ஷெட்டி, அர்ஷத் வர்ஷி ஆகியோரும் கதாநாயகர்களாக உள்ளே வர, மீண்டும் திஷாவுடன் எப்படியாவது சேர வேண்டும் என்று அக்ஷய் குமார் முயற்சிக்கிறார்.
இராணுவ வீரர்கள் கதாபாத்திரத்தில் அனைவரும் நடிக்க, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அங்கு ஒரு குழப்பத்தில் பல கோடி மதிப்பிலான செட் நாசமாகிறது.
அதே சமயம் ஐ.டி ரெய்டில் சின்ஹாவின் சொத்துக்கள், பணம் எல்லாம் பறிமுதல் செய்யப்பட, கட்டாயம் இப்படம் வெற்றி பெற வேண்டும் என்று போனில் இயக்குநர்களிடம் அவர் கூறுகிறார்.
அதனால் பயங்கரவாதி ஜாக்கி ஷெராப் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் உண்மையான கிராமத்தில் படக்குழு இறங்குகிறது. அதன் பின்னர் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
வெல்கம், வெல்கம்பேக் பட சீரிஸின் அடுத்த படமாக வெல்கம் டு தி ஜங்கிள் படத்தை அகமது கான் இயக்கியுள்ளார். இவர் பாஹி 2, 3 படங்களை கொடுத்த இயக்குநர் ஆவார்.
காமெடி கதைக்களத்தில் சீரியசான விஷங்களை கொண்டு வந்து முடிக்க முயற்சித்திருக்கிறார்.
முதல் பாதி ஏனோதானோ என்று சென்றாலும் எங்கும் பெரிதாக சலிப்பு ஏற்படவில்லை. இடைவேளையில் வைத்த ஒரு விஷயம் எதிர்பாராதது.
இரண்டாம் பாதியில் திரைக்கதை தத்தளித்தாலும், அக்ஷய் குமார் உட்பட நடிகர்கள் காமெடி மூலம் காப்பாற்ற போராடியிருக்கிறார்கள்.
என்றாலும், செயற்கையான அவர்களின் நடிப்பு பல இடங்களில் உறுத்தலாக உள்ளன.
லாஜிக் என்ற வார்த்தைக்கே இந்தப் படத்தில் இடமில்லை என்பதை முதல் காட்சியிலேயே இயக்குநர் தெளிவுபடுத்தினாலும், பயங்கரவாதிகளை நடிகர்களை தோற்கடிப்பது எல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்.
பூத் பங்களாவின் ஹிட்டைத் தொடர்ந்து அக்ஷய் குமார் தன்னால் முடிந்த அனைத்து காமெடி விஷயங்களையும் செய்துள்ளார். குறிப்பாக, ஹீரோ இமேஜை விடுத்து பிற கதாபாத்திரங்கள் தன்னை அடிப்பதை வாங்கி கொண்டு, அதனை காமெடியாக மாற்றுவது எல்லாம் அவரால் மட்டுமே முடியும்.
திஷா பதானி கிளாமர் டாலாக மட்டுமே வந்து போகிறார். ஜாக்குலின் கூட ஏதோ கொஞ்சம் நடிக்க முயற்சித்திருக்கிறார். ரவீணா டாண்டானின் நடிப்பு ரொம்ப ஓவர்டோஸ்.
சுனில் ஷெட்டி ஆக்ஷனில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.
பரேஷ் ராவல், ராஜ்பாலை விட காமெடியில் ஜானி லெவேர் தூக்கி சாப்பிடுகிறார். லாரா தத்தாவின் கேமியோ நல்ல என்டர்டைன்மெண்ட்.
காமெடிக்கு உரிய கதைக்களத்தில் திரைக்கதையில் இயக்குநர் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
பல இடங்களில் காமெடி ஒர்க்அவுட் ஆனாலும், சில இடங்களில் எரிச்சலையும், செயற்கைத்தன்மையையுமே வெளிப்படுத்துகின்றன.
டெக்னிக்கலாக வலுவான படமாக உள்ளது. பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை சில இடங்களில் காமெடிக்கு உதவியுள்ளது.
க்ளாப்ஸ்
அக்ஷய்குமார், சுனில் ஷெட்டி, ஜானி லெவேர்
சில காமெடி காட்சிகள்
சண்டைக்காட்சிகள்
பல்ப்ஸ்
வலுவில்லாத திரைக்கதை
மிகைப்படும் செயற்கையான நடிப்பு






