The Furious: திரை விமர்சனம்

The Furious: திரை விமர்சனம்
பிரபல ஜப்பானிய சண்டைப்பயிற்சியாளரான கென்ஜி டனிகாகி இயக்கத்தில் வெளியாகியுள்ள The Furious ஹாங் காங் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம் வாங்க.
கதைக்களம்
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நகரத்தில் கட்டுப்படுத்தப்படாத உள்ளூர் குழந்தைக் கடத்தலை பத்திரிகையாளர் மதியா விசாரிக்கிறார்.
ஒரு குழந்தைக்கு உதவ கடத்தல்காரர்களுடன் போராடும் மதியா, அந்த கும்பலின் தலைவன் மற்றும் அடியாளினால் பிடித்து செல்லப்படுகிறார்.
அவரைத் தேடி கடத்தல்காரர் போல் கணவர் நவின் அலைகிறார். மறுபுறம் வாய் பேசமுடியாத வாங் வெய் தனது மகள் ரெய்னிக்கு குங்ஃபூ சொல்லித்தருகிறார்.
தான் இல்லாவிட்டாலும் தனியாக வாழ வேண்டும் எனக் கூறி கட்டாயப்படுத்தி தற்காப்பு கலையை அவர் சொல்லித்தர, அது பிடிக்காமல் ரெய்னி ஓடுகிறார்.
வீதியில் ஒரு சிறுவன் தனக்கு உதவ வேண்டும் எனக்கூறி அழைத்துச் செல்ல, கடத்தல்காரர்கள் ரெய்னியை வேனில் வைத்து கடத்த முயற்சிக்கின்றனர்.
இதனை கண்ட வாங் அவர்களுடன் கடுமையாக சண்டையிட்டு மகளை காப்பாற்ற போராடுகிறார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது.
பின்னர் சில அடையாளங்களை வைத்து கடத்தல் கும்பல் இருக்கும் இடத்திற்கு வாங் செல்கிறார். அங்கு ஒரு சண்டையில் நவினை சந்திக்கும் வாங், அவருடன் சேர்ந்து மகளை மீட்க களமிறங்குகிறார்.
அதன் பின்னர் அவர் எப்படி மகளை காப்பாற்றினார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
2006யில் இருந்து 3 படங்களை மட்டுமே இயக்கியுள்ள கென்ஜி டனிகாகி நான்காவதாக இப்படத்தை கொடுத்துள்ளார்.
குழந்தை கடத்தலை பின்னணியாக வைத்து ஆக்ஷன் கதைக்களத்தில் பொறி பறக்க வைத்துள்ளார் இயக்குநர்.
ஷி மியாவ்வின் முதல் சண்டைக்காட்சியில் ஆரம்பிக்கும் பரபரப்பு படம் முடியும் வரை நம்மை சீட் நுனியில் உக்கார வைக்கிறது.
குறிப்பாக, பிரையன் லி உடனான சண்டைக்காட்சிகள் எல்லாம் வேற லெவலில் நம்மை மிரள வைக்கின்றன. கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிக்கே நாம் கொடுத்த பணம் சரியா போச்சு; அந்தளவிற்கு மிரட்டல்.
ஜோ தஸ்லிமை தவறாக புரிந்துகொண்டு அவருடன் ஷி சண்டையிடும் காட்சியில், ஐயோ இரண்டு பேரில் யாருக்கும் எதுவும் ஆகக்கூடாது என்று நம்மை பதைபதைக்க வைக்கும்.
இருவரும் ஒன்றாக கைகோர்த்த பிறகு மரண சம்பவம் தான். சண்டைக்காட்சிகளுக்கு எனவே படத்தை எடுத்திருந்தாலும், வலுவான எமோஷனல் காட்சிகளையும் சிறந்த முறையில் கையாண்டுள்ளார் இயக்குநர்.
சிறுமி ரெய்னியாக நடித்திருக்கும் யங் என்யூ அழகான நடிப்பை கொடுத்துள்ளார். அவர் செய்யும் ஒன்றிரண்டு விஷயங்கள் நம்மை மறந்து கைத்தட்ட வைக்கும்.
மக் தின்-ஷு, லெய் ஜிலோங், ஷும் க்வான்-சின் மற்றும் ப்ராங்க் ஹுய் ஆகிய நான்கு பேர் இணைந்து பரபரப்பான திரைக்கதையை அமைத்துள்ளனர்.
எலியட் லேஉங், ஒலிவியா மற்றும் பிளையிங் லோட்டஸ் ஆகியோரது பின்னணி இசை பிரமாதம். மேடேவ்ர் செயுங்கின் ஒளிப்பதிவு அதகளம்.
க்ளாப்ஸ்
சண்டைக்காட்சிகள்
பரபர திரைக்கதை
கிளைமேக்ஸ்
எமோஷனல் விஷயங்கள்
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை
மொத்தத்தில் இந்த The Furious ஆக்ஷன் திரைப்பட ரசிகர்களுக்கு செம விருந்து. தவறாமல் பார்க்கவேண்டிய திரைப்படம்.






