கொரியன் கனகராஜு: திரை விமர்சனம்

கொரியன் கனகராஜு: திரை விமர்சனம்


வருண் தேஜ், ரித்திகா நாயக், சத்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள தெலுங்கு திரைப்படமான கொரியன் கனகராஜு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்

ராயலசீமாவின் பெனுகொண்டாவில் வசித்து வரும் கனகராஜு (வருண் தேஜ்), தான் சிறுக சிறுக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாட்டில் பிஸினஸ் செய்யும் அண்ணனுக்கு அனுப்பி வைக்கிறார்.


அதே சமயம் கொரியா சென்று அங்கேயே ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சைத்ராவை சந்திக்கிறார் கனகராஜு.

பார்த்தவுடனே காதலில் விழும் கனகராஜுக்கு, உள்ளூரில் செல்வாக்குமிக்க நபராக இருக்கும் சுனிலை பகைத்துக் கொள்கிறார்.

இந்த சூழலில் சுனிலின் மருமகனை ஒரு சண்டையில் அடிக்கும் கனகராஜு, ஜாடி ஒன்றில் இருக்கும் அஸ்தியை தெரியாமல் மதுவில் கலந்துகுடித்து விடுகிறார்.


அதன் பின்னர் அவரை ஆட்கொள்ளும் ஆவி, கனகராஜுவின் மூலம் சுனிலின் மருமகனை கொலை செய்துவிடுகிறது.

கனகராஜுவின் நண்பர் கிஷ்தப்பாவின் (சத்யா) அப்பா முரளிதர் கௌட் மூலம் கொரிய ஆவி குறித்த உண்மை தெரிய வருகிறது.


அதனைத் தொடர்ந்து, ஆவியின் ஆசையை கனகராஜு நிறைவேற்றினாரா? அவர் எப்படி தப்பித்தார் என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்


கிருஷ்ணார்ஜுனா யுத்தம், மேஸ்ட்ரோ படங்களை இயக்கிய மெர்லாபகா காந்தி இப்படத்தை இயக்கியுள்ளார்.


முதல் பாதி வரை வழக்கமான மசாலா பட பாணியில் நகரும் திரைக்கதை, ஹீரோவின் உடலில் ஆவி புகுந்தவுடன் பரபரவென பறக்கிறது.

ஆனால், எப்போது ஆவி ஹீரோவை ஆட்கொள்ளும் என்னும் எதிர்பார்ப்பை இயக்குநர் கொடுத்து, நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறார்.


அதனால் முதல் பாதி கொஞ்சம் நீளமாக செல்வதாக தோன்றுகிறது. என்றாலும் வருண் தேஜ், சத்யாவின் காமெடி மற்றும் ஆக்ஷ்ன் காட்சிகள் நம்மை அமர வைக்கின்றன.

கொரியாவுக்கு சென்றவுடன் திரைக்கதை ஜெட் வேகத்தில் பறக்கிறது. ஆக்ஷன், காமெடி என இரண்டையும் சரிவிகிதத்தில் கொடுத்துள்ளார் இயக்குநர். குறிப்பாக காமெடி காட்சிகள் தெறிக்ககின்றன.


வருண் தேஜ் முழுப்படத்தையும் தனது தோள்களில் சுமந்துள்ளார். கனகராஜுவாக உள்ளூரில் அட்ராசிட்டி செய்யும் அவர், கொரியாவில் ஆக்ஷன் அதகளத்தில் மிரட்டியிருக்கிறார்.


ஆவி புகுந்தவுடன் அவர் செய்யும் விஷயங்கள் எல்லாம் செம அடாவடி. ஆவியை விரட்ட பூஜை செய்யும் காட்சியில் சத்யாவும், முரளிதரும் கலக்கியிருக்கிறார்கள்.

பெரிய பில்டப் கொடுத்து அறிமுகமாகும் சுனிலின் கதாபாத்திரம் சட்டென முடிவது ஏமாற்றம். ஹீரோயின் ரித்திகா நாயக்கின் நடித்து ஓகே.


விடிவி கணேஷ் மற்றும் சிறுவன் பீமலா ரேவந்த் கூட்டணி காமெடியில் கிச்சுகிச்சு மூட்டுகிறது. கிளைமேக்ஸ் காஞ்சனா படத்தை பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது.

தமனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்; பின்னணி இசை அலப்பறை. மனோஜ் ரெட்டியின் ஒளிப்பதிவு சிறப்பு, சத்யாவின் படத்தொகுப்பை பொறுத்தவரை முதல் பாதியில் கொஞ்சம் வெட்டியிருக்கலாம்.

க்ளாப்ஸ்



வருண் தேஜ்



சண்டைக்காட்சிகள்
 

காமெடி



இசை  

பல்ப்ஸ்

முதல் பாதியின் நீளம்


மொத்தத்தில் இந்த கொரியன் கனகராஜுயை சிறு சிறு குறைகளை தவிர்த்து ஜாலியாக ரசிக்கலாம். பக்காவான கமர்ஷியல் படம்.


ரேட்டிங்: 2.75/5 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *