Hail Mary (மலையாளம்): திரை விமர்சனம்


குஞ்சாகோ போபன், சுராஜ் வெஞ்சரமூடு, அனு சித்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள Hail Mary மலையாளத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்

தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக மதுசந்தரன் (குஞ்சாகோ போபன்), கணவரை பிரிந்து மகளுடன் வாழும் Annie-யை (அனு சித்தாரா) காதலிக்கிறார்.

அவரது மகள் ஹன்னா மதுசந்தரன் மீது மிகவும் பாசமாக இருப்பதைப் பார்த்து, Annie அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்.

ஒரு வாரத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ள நிலையில், உடற்கூறாய்வு துறையில் பணியாற்றிய சுஹாசினி பங்குபெறும் நிகழ்ச்சியில், அவருக்கு ஒரு காலத்தில் டிரைவராக வேலை செய்த மதுசந்தரன் கலந்துகொள்கிறார்.

அங்கு அவரை சுஹாசினி பாராட்ட, காவலர்கள் இருவரை அதை கவனித்து மதுசந்தரனை பின்தொடர்கிறார்கள். பின்னர் அவர் மீது ஆட்கொணர்வு மனு போடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன சிபி (சுராஜ்) என்பவரின் மகள் மரியா உயிருடன் இருந்தால் ஒப்படைக்க வேண்டும் அல்லது இறந்திருந்தால் உடலை ஒப்படைக்க வேண்டும்.

மரியாவின் உறவுமுறை சகோதரி எலீனா அந்த மனுவை சமர்ப்பித்த நிலையில், உண்மையில் தான் மரியாவை கடத்தவில்லை என்று மதுசந்தரன் கூறுகிறார்.

ஆனால், அவரை யாரும் நம்பாத காரணத்தினால் 45 நாட்களுக்குள் தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்.

அதே சமயம் Annie-யும் மதுசந்தரனை சந்தேகப்பட திருமணம் தடைபடுகிறது. மரியாவுக்கு என்ன ஆனது? யார் குற்றவாளி என்பதை மதுசந்தரன் எப்படி கண்டுபிடித்தார்? என்பதே மீதிக்கதை.

Hail Mary (மலையாளம்): திரை விமர்சனம் | Hail Mary Movie Review

படம் பற்றிய அலசல்

Hail Mary திரைப்படத்தை கண்ணூர் ஸ்குவாட், ராக்கெட்டரி படங்களில் பணியாற்றிய விஷ்ணு ரவிகுமார் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதையை ஜி.ஆர்.இந்துகோபன் எழுதியிருக்கிறார்; மார்ட்டின் பிரகத் மற்றும் நீரஜ் ராஜன் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ளனர்.

2003யில் கடத்தப்படும் 9 வயது பெண் குழந்தை என்ன ஆனது, குற்றம்சாட்டப்பட்ட நபர் உண்மையிலேயே கடத்தினாரா அல்லது எப்படி தன்னை நிரபராதி என்று நிரூபித்தார் என்ற கதைக்கருவை விறுவிறுப்பான திரைக்கதையில் படமாக்கியுள்ளார் இயக்குநர்.
 

குஞ்சாகோ போபன் மீது புகார் அளிக்கப்பட்ட காட்சியில் இருந்து படம் வேகமெடுக்கிறது. ஒரு சில விஷயங்கள் அவர் மீது பார்வையாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்க, அதன் பின்னணியில் வேறொரு மர்மம் உள்ளது என்பதும் குழப்பத்தை தர இடைவேளை வந்துவிடுகிறது.

ஒருவழியாக இவர்தான் குற்றவாளி என நாம் நிம்மதி பெருமூச்சுவிட, அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் கிளைமேக்ஸ் வரை யூகிக்க முடியாத வகையில் கொண்டு செல்கின்றன.

ஹீரோ விசாரணையில் ஈடுபட போலீசார் தடங்கலாக இருக்கும் காட்சிகள் பரபரப்பு. ஒரு கட்டத்தில் குஞ்சாகோ போபன் வெகுண்டெழுந்து சண்டையிடும் காட்சி சர்ப்பரைஸ் மொமெண்ட்.

அதிலும் அந்த சண்டைக்காட்சியை வடிவமைத்த விதம் மிக அருமை. அதனைத் தொடர்ந்து வரும் சேஸிங் மற்றும் மற்றொரு ஆக்ஷ்ன் மொமெண்ட் எல்லாம் பயங்கரம்.

எங்குமே யூகிக்க முடியாத வகையில் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றதில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு ரெவிக்குமார்.

குஞ்சாகோ போபனுக்கு இந்த கேரக்டர் எல்லாம் அல்வா சாப்பிடுவது போன்றது. சமீபத்தில் இதேபோன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மது என்ற கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.

சுராஜிற்கு மிகவும் சின்ன ரோல்; பார்வையிலேயே மிரட்டுகிறார் ஜெயிலர் 2-யில் மிரட்டிய ஹக்கிம் ஷாஜகான். அனு சித்தாரா, வினய் போர்ட், ஜெகதீஷ், சுஹாசினி போன்ற நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர்.

ராபி வர்கீசின் கேமரா ஒர்க் அருமை. ஜேக்ஸ் பியோய் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். விஷ்ணு சுஜாதாதனின் சவுண்ட் டிசைன் சிறப்பு. கலை கிங்சன், சந்தோஷின் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டல்.

க்ளாப்ஸ்



குஞ்சாகோ போபன்




திரைக்கதை



யூகிக்க முடியாத கிளைமேக்ஸ்




பின்னணி இசை மற்றும் சண்டைக்காட்சிகள் 

பல்ப்ஸ்



சொல்லும்படி ஒன்றுமில்லை 

மொத்தத்தில் இந்த Hail Mary மலையாள திரையுலகில் இருந்து மற்றொரு தரமான கிரைம் த்ரில்லர் ட்ரீட். கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம்.

ரேட்டிங்: 3.25/5 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *