தி மிஸ்டரி ஆஃப் மணி.. விமர்சனம்

வதந்தி: The Fable of Velonie வெப் சீரிஸின் வெற்றியை தொடர்ந்து, வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸில் சசிகுமார், யஷ்வந்த், அனகா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முதல் சீசனை போலவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை வதந்தி 2 பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
மத்திய அமைச்சர் தமிழ்நாட்டில் 8 வழி சாலைக்காக நடக்கும் பூமி பூஜையின்போது தோண்டப்பட்ட குழியில் இருந்து எலும்புகூட கிடைக்கின்றன.
சுமார் இரண்டரை ஆண்டுக்கு முன் புதைக்கப்பட்ட இந்த எலும்புகூட யாருடையது? இதற்கு பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதை விசாரிக்கும் காவல் அதிகாரியாக SI மூஸா ராசா (சசிகுமார்) நியமனம் செய்யப்படுகிறார்.
எலும்புக்கூட்டை அடிப்படையாக வைத்து விசாரணையை ஆரம்பிக்கும் சசிகுமார், படிப்படியாக ஆதாரங்களை திரட்டுகிறார்.
ஒரு கட்டத்தில் இதற்கு காரணமானவர் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஜல்லிக்கட்டு வீரர் முடக்கத்தான் மணி என உறுதி செய்யப்படுகிறது. அவருக்கு ஆயுள் தண்டனையும் கிடைக்கிறது.
ஆனால், சசிகுமாருக்கு இதில் ஒரு நெருடல் இருந்துகொண்டே இருக்கிறது. முடக்கத்தான் மணி ஒரு நிரபராதி என அவர் சந்தேகப்படுகிறார்.
முடக்கத்தான் மணி யார்? அவர் தான் இந்த கொலையை செய்தாரா? இல்லையா? இதன் பின்னணி என்ன? என்பதே வதந்தி சீசன் 2-வின் மீதி கதை.
விமர்சனம்
சசிகுமாரின் நடிப்பு வெப் சீரிஸை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. இஸ்லாமிய காவலதிகாரியாக மூஸா ராசாவாக தாடியுடன் நடித்துள்ளார் சசிகுமார். பல வருடங்களாக அவருக்கும், அவரது மனைவி அபர்ணா தாஸுக்கும் குழந்தை இல்லாத நிலையில், 8 வருடங்களுக்கு பின் அபர்ணா கர்ப்பமாகி இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியைப் பார்த்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒரு கணவனாகவும், முடக்கத்தான் மணி வழக்கின் மர்மத்தை கண்டுபிடிக்க போராடும் காவலதிகாரியாகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
கதையின் நாயகனாக ‘முடக்கத்தான் மணி’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள அறிமுக நடிகர் யஷ்வந்த் தமிழ் சினிமாவிற்கு நல்வரவாக அமைவார். சிறையில் இருக்கும்போது தன்னைப்பற்றி உண்மைகளை கூறும்போது, அதில் சில விஷயங்களை மறைத்து சொல்லும்போதும் சிறப்பாக நடித்துள்ளார். இறுதியாக தான் மறைத்து வைத்திருந்த உண்மை வெளிவரும்போது, அதை சசிகுமார் உலகத்திற்கு சொல்லிவிடக்கூடாது என யஷ்வந்த் செய்த நடிப்பு பாராட்டுக்குரியது.
எஸ்.பி ராத்திகா கதாபாத்திரத்தில் நடிகை அனகா நடித்துள்ளார். தன்னுடைய முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நம் கவனத்தையும் ஈர்க்கிறார். மேலும் அபர்ணா தாஸ், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவனின் வேலை எப்படிப்பட்டது, அதற்கு நம்மால் எப்படி உதவ முடியும் என கஷ்டங்களை மனதில் சுமந்துகொண்டு இருக்கும் பெண்ணாக நன்றாக நடித்துள்ளார். மற்றபடி அனைத்து நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு வெப் சீரிஸுக்கு பலம் சேர்க்கிறது.
வெப் சீரிஸின் தொடக்கத்தில் எவ்வளவு விறுவிறுப்பு இருந்ததோ, அது அப்படியே அடுத்தடுத்த எபிசோட்களில் குறைந்துவிட்டது. வெப் சீரிஸின் நீளத்தை நீட்ட வேண்டும் என்பதற்காகவே சீரியல் கில்லர் என்கிற கதைக்களத்தை நடுவில் வைத்து, கிட்டதட்ட 4 எபிசோட்கள் தேவையில்லாத அணியாக போய்விட்டன. வெப் சீரிஸ் பார்க்கும் நமக்கும் இது கடுப்பேற்றுகிறது. அதேபோல், சுவாரஸ்யம் மிகவும் குறைவு.
Human error எந்த அளவிற்கு விசாரணையில் நடக்கும் என்பதை சேத்தன் கதாபாத்திரம் சொன்னது அதிர்ச்சியை தந்தது. கிளைமாக்ஸ் ட்விஸ்ட் இருந்தாலும், இன்னும் வலுவான காரணமாக இருந்திருக்கலாம் என்கிற உணர்வும் வருகிறது. மொத்தத்தில் இந்த வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி பல குறைகள் இருந்தாலும் கண்டிப்பாக பார்க்கலாம்.






