விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் எனக்கு புது அடையாளம்.. இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா

விஸ்வநாத் & சன்ஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சூர்யா இந்த ஆண்டு கருப்பு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.
இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த டீசர், பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
வருகிற 12-ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், திரையரங்கில் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். நேற்று விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
எனக்கு புது அடையாளம்
இந்த விழா மேடையில் பேசிய சூர்யா, விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் குறித்து மகிழ்ச்சியான சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
இதில், “விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தை பார்த்தபிறகு, தயாரிப்பாளர் நாகவம்சியிடம் இப்படியொரு படத்தை கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தேன். இப்படம் எனக்கு ஒரு புதிய அடையாளம், இதை தந்ததற்கு இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு நன்றி”.
“நான் இப்படியொரு திரைப்படத்தில் நடித்து நீண்டகாலம் ஆகிவிட்டது. இந்த படம் முழுக்க படம் பார்ப்பவர்களை அனைவரிடமும் சிறிய சிரிப்பு இருந்துகொண்டே இருக்கும். மேலும், இப்படம் ரொமான்ஸ், குடும்பம், நகைச்சுவை மற்றும் ஹீரோவுக்கான மாஸ் குறித்து பேசுகிறது” என கூறினார்.
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா பகிர்ந்துகொண்ட இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. பலரும் சூர்யாவிற்கு அடுத்த பிளாக்பஸ்டர் தயாராகிவிட்டது என கூறி வருகிறார்கள். கருப்பு திரைப்படத்தை தொடர்ந்து இப்படமும் மாபெரும் வெற்றியை சூர்யாவிற்கு பெற்று தருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






