காளிதாஸ் 2 திரைவிமர்சனம்

காளிதாஸ் 2 திரைவிமர்சனம்


இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் நடிகர் பரத் நடிப்பில் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி 2018ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் காளிதாஸ். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காளிதாஸ் 2 திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் இன்று காளிதாஸ் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்

காளிதாஸ் முதல் பாகத்தில் தனது மனைவிதான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம் என தெரிந்தபின் கதை முடிவுக்கு வரும். அதன்பின், காளிதாஸ் 2 வேறொரு கதைக்களத்தில் நகர்கிறது.

கதையின் தொடக்கத்தில், வக்கீல் ஒருவர் ரவுடியை கொலை செய்கிறார். அந்த கொலை கேஸை பரத் விசாரிக்கிறார். அப்போது, 568 வீடுகள் கொண்ட அபார்ட்மெண்டில் இருக்கும் குழந்தை காணாமல் போய்விட்டது என புகார் வர, விரைவாக தனது குழுவுடன் அந்த அபார்ட்மெண்டுக்கு செல்கிறார் பரத்.

உடனடியாக தனது விசாரணையையும் தொடங்குகிறார்.

ஆனால், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால், அசிஸ்டன்ட் கமிஷனர் பவானி ஸ்ரீ அந்த கேஸை பரத்துடன் இணைந்து விசாரிக்க தொடங்குகிறார். இந்த சமயத்தில் அந்த குழந்தை பிணமாக மீட்கப்படுகிறது. இந்த குழந்தையை கொலையை தொடர்ந்து அதே அபார்ட்மெண்டில் மீண்டும் ஒரு கொலை நடக்கிறது. இந்த முறை ஒரு சிறுமி கொலை செய்யப்படுகிறார்.

இதன்பின், கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் திசை தெரியாமல் போலீஸ் நிற்கிறது. இந்த கொலைகளை எல்லாம் செய்வது யார்? அந்த வக்கீல் எதற்காக அந்த ரவுடியை கொலை செய்தார்? இதற்கெல்லாம் என்ன சம்மந்தம் இருக்கிறது? இதையெல்லாம் பரத் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீது கதை.

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகன் பரத் தனது துடிப்பான நடிப்பால் முழு படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார். பல ஆண்டுகள் கழித்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கும் பூவே உனக்காக பட நடிகை சங்கீதாவின் நடிப்பும் நன்றாக இருந்தது. அதே போல், பவானி ஸ்ரீ, அஜய் கார்த்தி உள்ளிட்ட மற்ற அனைவரின் நடிப்பும் ஓகே.

இயக்குநர் ஸ்ரீ செந்தில் முதல் பாகத்தை மிகவும் விறுவிறுப்பாகவும், நம்மை சிந்திக்க வைக்கும்படியான காட்சிகளையும் படத்தில் வைத்திருப்பார். அடுத்தென்ன அடுத்தென்ன என்று திரைக்கதை பரபரப்பாக நகரும். அதுவே காளிதாஸ் படத்தின் முதல் பாகத்திற்கான வெற்றியாக அமைந்தது.

ஆனால், காளிதாஸ் 2-வில் பரபரப்பே இல்லை. அடுத்து இதுதான் நடக்கப்போகிறது என்று ஓரளவுக்கு நன்றாக கணிக்க முடிகிறது. கிளைமாக்ஸ் ட்விஸ்ட் அருமையாக இருந்தாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் மிகமிக குறைவு. அதே போல், கொலைக்கான காரணம் வலுவாகவும், அழுத்தமாகவும் இல்லை. அதுவே காளிதாஸ் 2 படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஆகும். மேலும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் சுவாரஸ்யமானதாக இல்லை.

படத்திற்காக பின்னணி இசையா, அல்லது பின்னணி இசையில் படமா என்கிற கேள்வி வருகிறது. காரணம், ஒவ்வொரு காட்சியிலும் பில்டப் ஏற்றுகிறோம் என படம் முழுக்க முக்கால்வாசி இடங்களில் பின்னணி இசை மட்டுமே நிரம்பி இருக்கிறது. திரில்லர் படம் என்றால் பின்னணி இசை மாபெரும் அளவில் கைகொடுக்கவேண்டும். ஆனால், காளிதாஸ் 2 படத்திற்கு பின்னணி இசையே காலை வாரி விட்டு விட்டது.

படத்திற்கான Writing இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் படத்தை சில இடங்களில் காப்பாற்றுகிறது.   

பிளஸ் பாயிண்ட்

நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு

கிளைமாக்ஸ் ட்விஸ்ட்


மைனஸ் பாயிண்ட்

பின்னணி இசை

விறுவிறுப்பில்லாமல் நகரும் திரைக்கதை

அடுத்தென்ன என்று கணிக்க முடிந்த காட்சிகள்

திரில்லர் கதைக்கு தேவையான பரபரப்பு இப்படத்தில் இல்லை


Writing

மொத்தத்தில் காளிதாஸ் 2 ஏமாற்றம்


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *