‘ஆபரேஷன் சிந்தூர்’ திரைப்பட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு… மன்னிப்பு கேட்ட இயக்குநர்

‘ஆபரேஷன் சிந்தூர்’ திரைப்பட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு… மன்னிப்பு கேட்ட இயக்குநர்



புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இதற்கிடையில், இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலை தழுவி திரைப்படம் எடுக்க பாலிவுட் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ‘ஆபரேஷன் சிந்தூர்’, ‘மிஷன் சிந்தூர், ‘சிந்தூர்: தி ரிவெஞ்ச்’ உள்ளிட்ட தலைப்புகளை பதிவு செய்வதற்காக இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (IMPPA), இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கவுன்சில் (IFTPC) மற்றும் மேற்கு இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (WIFPA) ஆகியவற்றிடம் கடந்த 2 நாட்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், இயக்குநர் உத்தம் மகேஷ்வரி என்பவர், தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று இரவு வெளியிட்ட பதிவில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் புதிய திரைப்படம் ஒன்றை எடுக்கப்போவதாக அறிவித்தார். அந்த படத்தை ‘நிக்கி விக்கி பாக்னானி பிலிம்ஸ்’ மற்றும் ‘தி கண்டெண்ட் எஞ்ஜினியர்’ ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பான போஸ்டரையும் அவர் வெளியிட்டார். அதில் போர்க்களத்தில் ஒரு பெண் ராணுவ அதிகாரி நெற்றியில் குங்குமம் இடுவது போலவும், போர் விமானங்கள், பீரங்கிகள் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருந்தன. இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

லாபத்திற்காக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரை பயன்படுத்த திரைத்துறையினர் முயற்சி செய்யக்கூடாது என்றும், சட்டரீதியாக அதற்கு அனுமதி இருந்தாலும், தார்மீக ரீதியாக அது மிகவும் தவறானது என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும், இந்த சமயத்தில் இப்படி ஒரு படம் எடுப்பது தேவையற்றது என்றும் சிலர் கடுமையாக விமர்சித்தனர்.

இதையடுத்து திரைப்பட அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் உத்தம் மகேஷ்வரி, மன்னிப்பு கோரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டார். அதில், “ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நான் வெளியிட்ட திரைப்பட அறிவிப்பு குறித்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல.

ஒரு இயக்குநராக நமது ராணுவ வீரர்களின் தைரியம், தியாகம் மற்றும் வலிமையால் நெகிழ்ச்சியடைந்தேன். இந்த வலிமையான கதையை திரைக்கு கொண்டுவர விரும்பினேன். இந்த யோசனை நமது தேசத்தின் மீதான ஆழ்ந்த மரியாதை மற்றும் அன்பில் இருந்து பிறந்தது, புகழ் மற்றும் பணத்திற்காக அல்ல.

திரைப்படத்தை அறிவித்த நேரம் சிலருக்கு அசவுகரியத்தையோ அல்லது வலியையோ ஏற்படுத்தியிருக்கலாம். அதற்காக, நான் மிகவும் வருந்துகிறேன். எல்லையில் போராடும் வீரர்கள் மற்றும் தியாகிகளின் குடும்பத்தினருக்காக எங்கள் அன்பும், பிரார்த்தனையும் எப்போதும் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *