அனந்தன் காடு திரை விமர்சனம்

இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், முரளி கிருஷ்ணா திரைக்கதையில் ஆர்யா, இந்திரன்ஸ், சுனில் போன்ற நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் அனந்தன் காடு. இது மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழில் டப் செய்து வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
கோவாவில் தனது மகளின் திருமண நிச்சயதார்த்தத்தை வில்லன் சுனில் நடத்திக்கொண்டிருக்கிறார். அப்போது இளைஞர்கள் சிலர் சுனிலை துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கின்றனர். இவர்கள் யார்? எதற்காக சுனிலை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துள்ளனர் என்பதை நாம் அறியும் பொழுது, கதை பின்னோக்கி செல்கிறது.
1989-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போர் மற்றும் தமிழினத்திற்கு எதிராக நடந்த வன்முறையில் தனது குடும்பத்தை இழக்கிறார் போராளி ஆர்யா. அங்கிருந்து தப்பி பிழைத்து இந்தியாவில் தமிழகம் மற்றும் கேரள எல்லை பகுதியில் தஞ்சமடைகிறார்.
ஆர்யாவின் கதை ஒரு பக்கம் நகர, மறுபுறம் கேரளாவில் உள்ள முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இந்திரன்ஸ் தலைமையில் கூலிப்படை இயங்கி வருகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் இனி இந்த மாதிரியான விஷயங்களை செய்யமாட்டோம் என முடிவு செய்து தொழில் இருந்து இந்திரன்ஸ் குழு விலகி, நிகழ்ச்சிகளில் பாட்டு பாடும் கச்சேரி குழுவை ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் ஆர்யா, இந்திரன்ஸ் குழுவுடன் இணையும் சூழல் ஏற்படுகிறது.
இவர்களுடன் இணைந்த ஆர்யாவுக்கு என்ன ஆனது? இந்த ஒரு முடிவால் அவர் சந்தித்த இன்னல்கள் என்னென்ன? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் எடுத்துக்கொண்ட கதைக்களம் அதை முரளி கோபி திரைக்கதையில் வடிவமைத்த விதம் நன்றாக இருந்தது.
என்னதான் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்ந்தாலும் கூட, திரைக்கதையில் தெளிவு இல்லாததால் படம் பார்ப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. முன்னுக்கு பின் முரணாக இருக்கும் காட்சிகள், அரசியல் குறைகள், லாஜிக் மீறல்கள் மற்றும் திடீரென மாறும் காட்சிகள் படத்தோடு நமக்கு ஒரு பிணைப்பை ஏற்படுத்தவில்லை. இதுவே இப்படத்தின் மிகப்பெரிய மைனஸாக அமைந்துவிட்டது.
திரைக்கதையில் தொய்வு இல்லை; ஆனால் அதே சமயம் தெளிவும் இல்லை. அதற்கு சற்று மெக்கெட்டு இருக்கலாம். அதை தவறவிட்டுவிட்டார் இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார். ஈழத்தில் தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவிக்கும் காட்சிகள் மனதை வருடுகின்றன. ஆனால், அதன்பின் நகரும் கதையில் ஓரிரு காட்சிகள் எமோஷனலாக இருந்தாலும், நம் மனதை தொடும் வகையில் எதுவும் நம்மோடு கனெக்ட் ஆகவில்லை. சில காட்சிகளை எளிதாகவும் கணிக்க முடிந்தது. குறிப்பாக ப்ரீ கிளைமாக்ஸ் இப்படி தான் நடக்கும் என தெளிவாக தெரிகிறது.
கதாநாயகன் ஆர்யா துடிப்பான நடிப்பை இப்படத்தில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தை இழந்த ஈழத்தமிழனாக மிகவும் ஆக்ரோஷமாக நடித்துள்ளார். தனது குடும்பத்தினர் ஒவ்வொருவராக கொலை செய்யப்படும்போது அவர் கதறி துடித்தது மிகவும் எமோஷனலாக இருந்தது.
யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் இந்திரன்ஸ், இப்படத்தில் சற்று அதிரடியான ரோலில் நடித்துள்ளார். குறிப்பாக ப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகளில் இவருடைய நடிப்பு வேற லெவலில் இருந்தது. மேலும் முரளி கோபி, தேவமோகன், நிகிலா விமல், அக்ஷய்குமார், சாந்தி பாலச்சந்திரன், போஸ் வெங்கட் ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருந்தது.
வில்லன்களாக நடித்து திரைக்கதைக்கு சுவாரஸ்யமாக இருந்தவர்கள் விஜயராகவன் மற்றும் சுனில். அரசியலில் சூழ்ச்சி என்பது அனைவரும் அறிந்தது. தனக்காக வேலை செய்பவனைக்கூட அரசியல்வாதி தனக்கென ஒரு ஆபத்து என்று கருதினால் விட்டுவைக்க மாட்டான், கொன்று விடுவான் என பல திரைப்படங்களில் காட்டியதையே தான் இப்படத்திலும் காட்டியுள்ளனர்.
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியையும் தனது ஒளிப்பதிவால் எஸ்.யுவா செதுக்கியுள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகள். சண்டை காட்சிகளை எடிட் செய்த விதம் விறுவிறுப்பாக இருந்தாலும் கூட, எதற்காக இவ்வளவு அதிகமாகக் கட் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
பிளஸ் பாயிண்ட்ஸ்
ஆர்யா, இந்திரன்ஸ்
மற்ற நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
வசனங்கள்
மைனஸ் பாயிண்ட்ஸ்
விறுவிறுப்பாக இருந்தாலும் தெளிவாக இல்லாத திரைக்கதை
கனெக்ட் ஆகாத சில எமோஷனல் காட்சிகள்
சண்டை காட்சிகளில் வந்த அதிகப்படியான கட்ஸ் சலிப்பை ஏற்படுத்துகின்றன
லாஜிக் மீறல்கள்






