They Will Kill You திரை விமர்சனம்

They Will Kill You
ரஷ்ய இயக்குநர் கிரில் சோகோலோவ் இயக்கத்தில் ஹாலிவுட் ஆக்ஷ்ன் திரில்லராக வெளியாகியுள்ள They Will Kill You திரைப்படத்தின் விமர்சனத்தைப் பார்ப்போம் வாங்க.
கதைக்களம்
ஏசியா ரீவ்ஸ் (ஸஸி பீட்ஸ்) என்ற இளம்பெண் தனது சிறுவயது தங்கையை அழைத்துக் கொண்டு தன் கொடுமைக்கார அப்பாவிற்கு பயந்து ஓடுகிறார்.
இளைய மகளை தன்னுடன் அழைத்துச் செல்ல அவர் முயல, ஏசியா துப்பாக்கியால் அவரை சுட்டுவிடுகிறாள்.
உடனே அங்கே போலீஸ் வாகனம் வர, தங்கையை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிடுகிறாள்.
இது நடந்து 10 ஆண்டுகள் கழித்து நியூயார்க்கில் உள்ள Virgil என்ற ஆடம்பர ஹோட்டலுக்கு பணியாள் வேலைக்காக ஏசியா செல்கிறாள்.
அங்கு மேற்பார்வையாளராக இருக்கும் லிலித் அவரை வரவேற்க, உள்ளே ஏற்கனவே பணியாற்றும் நபர்கள் ஒருமாதிரி ஏசியாவை பார்க்கின்றனர்.
அந்த ஒட்டுமொத்த கட்டிடமே ஏசியாவிற்கு விசித்திர உணர்வை கொடுக்க, தனது அறைக்கு சென்று குளித்துவிட்டு உறங்க செல்கிறார்.
அப்போது கருப்பு ஆடை அணிந்த ஒரு உருவம் அவளை மயக்கமடைய வைக்க முயல, அதனுடன் போராடி தப்பித்த பின்தான் அது ஒரு ஆண் என தெரிய வருகிறது.
உடனே நான்கு பேர் அறைக்குள் நுழைந்து ஏசியாவை தாக்க பதிலுக்கு அவளும் அவர்களை தாக்கி கொல்கிறார். ஆனால், அவர்கள் அனைவரும் உயிர்பெற்று மீண்டும் எழுகின்றனர்.
அதன் பின்னர் ஏசியாவிற்கு என்ன ஆனது? அங்கிருப்பவர்கள் யார்? அவளின் தங்கையின் கதி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையே மீதிப்படம்.
படம் பற்றிய அலசல்
ஒரு விசித்திரமான ஆடம்பர ஹோட்டலுக்குள் கொடூரமான மனிதர்களிடம் மாட்டிக்கொள்ளும் கதாநாயகி எப்படி தப்பிக்கிறாள் என்ற கதையை இரத்தம் தெறிக்க தெறிக்க காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கிரில் சோகோலோவ்.
ரஷ்ய இயக்குநரான இவர் Why Don’t You Just Die!, No Looking Back படங்களைத் தொடர்ந்து இயக்கியிருக்கும் படம் இது.
ஆரம்ப காட்சி முதலே பரபரப்பு தொற்றிக் கொள்ளும் வகையில் அலெக்ஸ் விட்வாக் உடன் இணைந்து திரைக்கதை அமைந்துள்ளார் கிரில்.
முதல் சண்டைக்காட்சியிலேயே தெறிக்க விடும் கதாநாயகி ஸஸி பீட்ஸ், ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் அட்டகாசம் செய்துள்ளார்.
அதனுடன் சேர்ந்து பிளாக் காமெடியும் செய்து அசத்துகிறார்.
ஒரு சில சென்டிமென்ட் காட்சிகளிலும் ஸ்கோர் செய்து மொத்த படத்தையும் அவரே தங்குகிறார்.
தலை துண்டிக்கப்பட்டு முண்டத்தில் இருந்து இரத்தம் பீறிட்டு வருவது, கண் மட்டும் நகர்ந்து சென்று நோட்டமிடுவது போன்ற எண்ணற்ற வன்முறை காட்சிகள் படத்தில் உள்ளதால் இரத்த வாடை அடிக்காத குறைதான்.
என்றாலும் திரைக்கதையின் வேகம் படத்துடன் ஒன்ற வைக்க லாஜிக் மீறல்களையும் மறந்து நம்மை பார்க்க வைக்கிறார் இயக்குநர்.
கார்லோஸ் ராஃபேல் ரிவேராவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். கிளைமேக்சில் வரும் ட்விஸ்ட்கள் அருமை.
மரியா ரீவ்ஸாக வரும் மைஹா’லா, பேட்டர்சன் ஜோசப், டாம் ஃபெல்டன், ஹீதர் கிரஹாம் மற்றும் பாட்ரிசியா ஆகியோர் மிரட்டியிருக்கின்றனர்.
ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு ஜேம்ஸ் ரேமரின் பின்னணிக் குரல் நம்மை பயமுறுத்துகிறது.
லாஜிக் மீறல்கள் உட்பட சில குறைகள் இருந்தாலும், இந்தப் படம் இப்படித்தான் என முதலிலேயே செட் ஆகி விடுவதால் ஆக்ஷன் பட விரும்பிகளுக்கு செம ட்ரீட் இப்படம். என்றாலும் கிளைமேக்ஸை கொஞ்சம் இழுத்தது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
க்ளாப்ஸ்
ஸஸி பீட்ஸின் மிரட்டலான நடிப்பு
பரபரப்பான திரைக்கதை
பிளாக் காமெடி
ஒரு சில ட்விஸ்ட்
பல்ப்ஸ்
கிளைமேக்சின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்
மொத்தத்தில் இரத்தம் தெறிக்க ஒரு ஆக்ஷன் படம் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு செம ட்ரீட் இத்திரைப்படம். லாஜிக் எல்லாம் பார்க்காமல் என்ஜாய் பண்ணலாம்.






