நான் யாரிடமும் ‘ஈகோ’ பார்ப்பதில்லை.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஸ்ரீலீலா
பிரபல நடிகை ஸ்ரீலீலா குறித்து இணையத்தில் சில வதந்திகள் சமீபத்தில் பரவி வருகின்றன. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் பேசியுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ரீலீலா
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலா, தற்போது தமிழ் சினிமாவிலும் அந்த இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். இவருடைய முதல் தமிழ் திரைப்படமாக ‘பராசக்தி’ வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், ஸ்ரீலீலாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ் சினிமா ரசிகர்கள் குறித்தும், தன்னைப்பற்றி இணையத்தில் பரவி வரும் வதந்திகள் குறித்தும் நடிகை ஸ்ரீலீலா பேசியுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்கள்
“தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களை கொண்டாடுவதில் வல்லவர்கள். ஒரு பிரபலத்தை பிடித்துவிட்டால் அவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து அன்பு காட்டுவார்கள். அந்த வகையில் தெலுங்கு ரசிகர்களுக்கு இணையாக தமிழ் ரசிகர்களையும் நேசிக்கிறேன். இத்தகைய அன்பும், பாசமும் கொண்ட உறவுகள் கிடைப்பதால் சினிமாவில் இருப்பதையே பெருமையாக கருதுகிறேன்” என்றார்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
“எனக்கு இணையாக ஆட எந்த நடிகரும், நடிகையும் கிடையாது என நான் பெருமிதம் கொண்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்னிடம் அகந்தை என்பதே கிடையாது. நான் யாரிடமும் ‘ஈகோ’ பார்ப்பதில்லை. கெத்தும் காட்டுவதில்லை. எல்லோரையும் மதிப்பவள் நான். எனவே தேவையற்ற விஷயங்களை நம்ப வேண்டாம்; அதனை பொருட்படுத்தவும் வேண்டாம். என் இப்போதைய சிந்தனை எல்லாமே நடிப்பில் மட்டும்தான். அதைத்தவிர என் மனதில் எதுவும் இல்லை. யாரும் இல்லை” என கூறியுள்ளார்.
