டி.வி. சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை: என்ன காரணம்..? வெளியான பரபரப்பு தகவல்கள்

டி.வி. சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை: என்ன காரணம்..? வெளியான பரபரப்பு தகவல்கள்


சென்னை,

சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 39), சீரியல் நடிகை. ‘சிறகடிக்க ஆசை’, ‘பனி விழும் மலர் வனம்’, ‘பாக்கியலட்சுமி’ போன்ற பல பிரபல டி.வி. தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஓரிரு படங்களிலும் தலைகாட்டி இருக்கிறார்.

ராஜேஸ்வரிக்கும், அவரது கணவர் சதீசுக்கும் கடந்த சில நாட்களாகவே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி சில நாட்களுக்கு முன்பாக சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கிருந்தபடியே சீரியல்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு ராஜேஸ்வரி தாய் வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீஸ் விசாரணையில் மன அழுத்தம் காரணமாக ராஜேஸ்வரி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, “சதீஷ்-ராஜேஸ்வரி தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்த ராஜேஸ்வரி திட்டமிட்டார். இதற்காக சமீபத்தில் கிடைத்த வீட்டின் குத்தகை தொகை ரூ.13 லட்சத்தை பயன்படுத்த நினைத்தார். இதற்கு சதீஷ் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ராஜேஸ்வரி அளவுக்கதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை ஒரேடியாக உட்கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

டி.வி. நடிகை ராஜேஸ்வரி மறைவு சக நடிகர்-நடிகைகள் இடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *