எஸ்.ஜே.சூர்யா இயக்கும் ”கில்லர்” படத்தில் இணைந்த கதாநாயகி|The heroine has joined the film ‘Killer’ directed by S.J.Surya

சென்னை,
தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படத்தை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள இப்படத்திற்கு ”கில்லர்” எனப்பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரீத்தி அஸ்ரானி இணைந்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. இதில், எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி அஸ்ரானி, கார்த்தி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சமீப காலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து பிஸியான நடிகராக வலம் வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. குறிப்பாக வில்லனாக இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. தற்போது இவர் பிரதீப் ரங்கநாதனுடன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, கார்த்தியுடன் ‘சர்தார் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
வாலி, குஷி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு ‘இசை’ படத்தை இயக்கி நடித்திருந்தார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனராவது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.