"அறியாத வயதில் தெரியாமல் பேசிவிட்டேன்"- மிருணாள் தாகூர் வருத்தம்

மும்பை,
இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவின் விருப்பத்துக்குரிய நாயகியாக ஜொலித்து வரும் மிருணாள் தாகூர், பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான பிபாஷா பாசுவை விமர்சித்தது சர்ச்சையானது. ‘பிபாஷா பாசுவின் தசைகள் ஆண்களைப் போல உள்ளது. அவரை விட நான் சிறப்பானவள்’, என்று என்றோ அவர் பேசியது தற்போது வைரலாகி கடும் சர்ச்சையாகி விட்டது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் மிருணாள் தாகூர் தற்போது இதுகுறித்து வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “19 வயதில் டீனேஜ் பெண்ணாக சில முட்டாள்தனமான விஷயங்களைப் பேசி இருக்கிறேன். நான் பேசிய வார்த்தைகள் எந்தளவுக்கு காயப்படுத்தும் என்பதை அப்போது புரிந்திருக்கவில்லை. யாரையும் உருவக்கேலி செய்வது என் நோக்கமல்ல. விளையாட்டாக கூட நான் அப்படி சொல்லியிருக்க கூடாது. விவரம் தெரியாமல் நான் பேசியது தவறுதான். அறியாத வயதில் தெரியாமல் பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார்.