அமீரக தேசிய தினம்: இசை நிகழ்ச்சியில் அமீரகத்திற்கான சிறப்பு பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்

அமீரக தேசிய தினம்: இசை நிகழ்ச்சியில் அமீரகத்திற்கான சிறப்பு பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்


அபுதாபி,

அமீரக தேசிய தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அபுதாபி அல் வத்பா பகுதியில் ஷேக் ஜாயித் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சிறப்பு இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அமீரகத்திற்காக அவர் இசையமைத்த ஜமால் அல் இத்திகாத் என்ற சிறப்பு பாடல் வெளியிடப்பட்டது.

அமீரகத்தின் நிறுவன தந்தை என போற்றப்படும் முன்னாள் அதிபர் மறைந்த ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யானின் தொலைநோக்கு பார்வையில் விளைந்த சாதனைகள், நாட்டின் வளர்ச்சி, புதுமை மற்றும் அமீரகத்தின் மதிப்புகளினால் உருவாக்கப்பட்ட அடையாளத்தை முன்னிலைப்படுத்தி இந்த இசைகோர்வை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா மற்றும் பெண்களால் நடத்தப்படும் அவரது இசைக்குழுவினரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 80 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், “ஜமால் அல் இத்திகாத் என்ற பாடலை உருவாக்கும் பணி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. ஆனால் உலகளாவிய பதற்றங்கள், போர்கள் காரணமாக பாடலை வெளியிட தாமதமானது. இந்த மோதல்கள் முடிவுக்கு வர வேண்டும் என விரும்பினோம். இப்போது அதற்கான சரியான நேரமாக உள்ளது.

ஜமால் அல் இத்திகாத் என்பது நம்பிக்கைக்கான நல்ல தொடக்கத்தை குறிக்கும். இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்கும் அதன் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் அனைத்து மக்களையும் அமீரகம் அரவணைக்கிறது. அன்பு, பெருமை மற்றும் முன்னேற்றத்தில் இணக்கமான தனித்துவமான நாடு இதுவாகும். இந்த பாடல் வளமான மனிதர்களின் பன்முகத்தன்மையை கொண்டாடுகிறது” என்று தெரிவித்தார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *