"தி ஹண்ட்" – ஓடிடியில் வெளியான ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவான ஹண்ட் தொடர் ஓடிடியில் வெளியாகியுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்பதூரில் குண்டுவெடிப்பின் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.நாட்டையே உலுக்கிய இந்த சதிச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை இந்திய உளவுத்துறை எப்படி கண்டுபிடித்தனர் என்பதை மையமாகக் கொண்டு ‘தி ஹண்ட்’ என்கிற பெயரில் இணையத் தொடர் உருவாகியுள்ளது.
இயக்குநர் நாகேஷ் குகுநூர் இயக்கத்தில் அமித் சியால், சஹில் வைத், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் தயாரான இத்தொடர் இன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
ராஜீவ் கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவில் அங்கம் வகித்த சில மூத்த அதிகாரிகள் எழுதிய புத்தகங்கள் உள்பட, மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு இந்தியத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சதியின் வரைபடத்தை அலசி ஆராயும் பல நூல்கள், புத்தகச் சந்தையில் பல மொழிகளில் நன்கு விலைபோயின. அனிருத்ய மித்ரா என்கிற புலனாய்வுப் பத்திரிகையாளர் எழுதி வெளியான புத்தகத்தின் தரவுகளைத் தழுவி, 7 அத்தியாயங்களைக் கொண்ட இத்தொடரை சோனி லிவ் தளத்துக்காகத் தேசிய விருதுபெற்ற இயக்குநர்களில் ஒருவரான நாகேஷ் குக்குனூரின் படைப்பாக்கக் குழுவினர் உருவாக்கியிருக்கிறார்கள்.