ஓ.டி.டி தளங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

திரையரங்குகள், தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த சினிமா திரைப்படங்களை தற்போது கையடக்க கருவியான செல்போனில் பார்க்கும் அளவு தொழில் நுட்பம் அபரிமிதமாக வளர்ந்துள்ளது. தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆன புதிய படங்கள் தற்போது, ஓடிடி-யிலும் வெளியாக தொடங்கியுள்ளன. வெப் தொடர்களும் அதிக அளவில் ஓடிடியில் வெளியிடப்படுகின்றன. இத்தகைய ஓடிடி தளங்களுக்கு சென்சார் கட்டுப்பாடு இல்லாததால் அதிக வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இடம் பெறுவதாக ஒரு குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
எனவே, ஓ.டி.டி மற்றும் சமூக ஊடகங்களில் ஆபாச படங்கள், வெப் சீரிஸ்களை ஒளிபரப்புவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், உல்லு, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எஎல்டி, எக்ஸ் உள்ளிட்ட ஓ.டி.டி மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அளித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.