டீசல்: திரை விமர்சனம் – சினிஉலகம்

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தீபவளி ரேஸில் வெளியாகியுள்ள டீசல் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போமா..
கதைக்களம்
1979யில் வட சென்னையின் கடலோர பகுதியில் மீனவ மக்களின் எதிர்ப்பையும் மீறி கச்சா எண்ணெய் குழாய் கொண்டு வரப்படுகிறது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியதில் தனது நண்பர்கள் இருவர் உயிரை விட, கச்சா எண்ணெய்யை திருடி விற்று அதில் வரும் பணத்தில் மக்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கிறார் சாய்குமார்.
இவ்வாறாக உயரும் அவர் 2014யில் பெட்ரோல் பங்கு உரிமையாளர் சங்க தலைவராக இருக்கிறார்.
அவரது வளர்ப்பு மகனான டீசல் வாசு (ஹரிஷ் கல்யாண்) கெமிக்கல் என்ஜினீயரிங் படித்ததை வைத்து கச்சா எண்ணெய்யை சரியான முறையில் பிராசஸ் செய்து தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பி, பின் அங்கிருந்து பெட்ரோல் மற்றும் டீசலாக கொண்டு வந்து பெட்ரோல் பங்குகளுக்கு அனுப்பும் வேலையை செய்கிறார்.
இவர்களுக்கு தொழில் எதிரியாக இருக்கும் விவேக் பிரசன்னா, வட மாநிலத்தில் இருந்து வரும் சாய்குமாரின் பெட்ரோல், டீசல் லாரிகளில் இருந்து பாதியை திருடி கலப்படமாக மாற்றுகிறார்.
இதற்கு போலீஸ் அதிகாரியான வினய் துணையாக இருக்க, ஒரு கட்டத்தில் ஹரிஷ் கல்யாண் இதனைக் கண்டுபிடிக்கிறார்.
அப்போது குழாயில் இருந்து எண்ணெய் எடுக்க தனக்கும் அனுமதி வேண்டும் என சங்கத்தில் விவேக் பிரசன்னா கேட்க, அங்கே வினய்க்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் மோதல் ஏற்படுகிறது.
அதன் விளைவாக ஹரிஷ் கல்யாண் தலைமறைவாக, விவேக் பிரசன்னா மற்றும் வினய் இருவரும் பல சதிகளை செய்கின்றனர்.
இது தெரிந்த பின் ஹரிஷ் கல்யாண் எப்படி அனைத்தையும் சரி செய்தார், கச்சா எண்ணெய் குழாயினால் அவதிப்படும் மக்களின் பிரச்சனையை எப்படி தீர்த்தார் என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
சென்சிடிவான கதையை முதல் படத்திலேயே கையில் எடுத்துள்ளார் இயக்குநர் சண்முகம் முத்துசாமி.
மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது, அப்புறப்படுத்தப்படுவது, கச்சா எண்ணெய்யை வைத்து நடக்கும் அரசியல், மீன்பிடிபத்தில் பிரச்சனை என ஒரே படத்தில் பல விஷயங்களை கூறியிருக்கிறார்.
ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோ நடிக்கக்கூடிய கதைதான்; ஹரிஷ் கல்யாணும் முடிந்தவரை அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
சண்டைக்காட்சிகள், எமோஷனல் காட்டும் இடங்கள், ரொமான்ஸ் என அனைத்திலும் நல்ல பங்களிப்பை தந்துள்ளார்.
குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார். எனினும் மாஸ் ஹீரோவுக்கான ஸ்கிரீன் பிரசென்சில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
வடசென்னை படத்தின் பாதிப்பு போல் பல கதாபாத்திரங்களும், திரைக்கதை அமைப்பும் உள்ளது. அதேபோல் இரண்டாம் பாதி கத்தி படத்தை நியாபகப்படுத்துகிறது.
அமீரின் ராஜன் பாணியில் சாய்குமாரின் கதாபாத்திரம் எழுதப்பட்டுள்ளது. அவரும் நல்ல நடிப்பை தந்துள்ளார்.
வினய் வில்லத்தனத்தை தனது மெனரிசத்திலேயே காட்டி மிரட்டுகிறார். அவர் விவேக் பிரசன்னாவுடன் சேர்ந்து சாப்பிடும் காட்சியில் செய்யும் விஷயம் தியேட்டரில் சிரிப்பலை.
சச்சின் கடேகர், கருணாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். அதுல்யாவிற்கு நடிப்பில் பெரிய வேலை இல்லை என்றாலும் துறுத்தலான கேரக்டராக இல்லாதது ஆறுதல்.
முதல் பாதி ஜெட் வேகத்தில் செல்ல இரண்டாம் பாதியின் ஆரம்பம் சற்று தொய்வாகிறது. எனினும் கிளைமேக்சை நெருங்கும்போது வேகமெடுக்கிறது திரைக்கதை.
படத்தின் மிகப்பெரிய பிளஸ் வசனங்கள்தான். திபு நினன் தாமஸின் இசை, பாடல்கள் அருமை.
அரசாங்கம் கார்பரேட் உடன் சேர்ந்து மக்களை வதைக்கிறது என்பதை சொல்லும் முனைப்பில் பல விஷயங்களை கூறுவதால் கதை ஆரம்பித்ததற்கும் பயணிப்பதற்கும் வேறுபாடு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் தொய்வாகிறது.
இதன் காரணமாக திரைக்கதை என்னதான் வேகமாக சென்றாலும் லாஜிக் மீறல்களை கவனிக்க முடிகிறது.
கச்சா எண்ணெய் குழாயால் ஏற்பட்ட பாதிப்பை ஹீரோ எப்படி பயன்படுத்தி சரி செய்தார் என்ற ஒரு வரி கதையிலேயே பயணித்திருக்கலாம்.
க்ளாப்ஸ்
கதைக்களம்
நடிகர்களின் பங்களிப்பு
மேக்கிங்
இசை
பல்ப்ஸ்
ஒரே நேர்கோட்டில் திரைக்கதையை கொண்டு சென்றிருக்கலாம்
மொத்தத்தில் இந்த டீசல் மீனவ மக்களின் பிரச்சனைக்கு நல்ல மைலேஜ் கொடுத்துள்ளது. சில குறைகளை தவிர்த்து கண்டிப்பாக திரையரங்கில் ரசிக்கலாம்.