இட்லி கடை திரை விமர்சனம்

இட்லி கடை திரை விமர்சனம்


முன்னணி நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள இப்படம், எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

இட்லி கடை திரை விமர்சனம் | Idli Kadai Movie Review



கதைக்களம்


ராஜ்கிரண் தனது ஊரில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய இட்லி கடைதான் அந்த ஊருக்கே அடையாளமாகவும் உள்ளது. ராஜ்கிரணின் மகனான தனுஷ் தனது தந்தையை போலவே தானும் ஆகவேண்டும் என்பதற்காக கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு, வெளியூருக்கு வேலைக்கு செல்கிறார்.

இட்லி கடை திரை விமர்சனம் | Idli Kadai Movie Review

சொந்த ஊரை விட்டு தனுஷ் செல்வது ராஜ்கிரணுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், தனது மகனின் ஆசைக்காக அவர் சரி என சொல்ல ஊரில் இருந்து புறப்படுகிறார் தனுஷ். வருடங்கள் செல்ல, சத்யராஜின் ஏஃப்சி நிறுவனத்தில் மூத்த செஃப் ஆக இருக்கிறார் தனுஷ். ஆனாலும், அவருக்கு தனது சொந்த ஊரில் இருக்கும் மன நிம்மதி அங்கு இல்லை.

சத்யராஜின் மகளான ஷாலினி பாண்டேவும் தனுஷும் காதலிக்க, அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால், இது ஷாலினி பாண்டேவின் அண்ணன் அருண் விஜய்க்கு சுத்தமாக பிடிக்கவில்லை. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், தனுஷின் தந்தை ராஜ்கிரண் இறந்துபோகிறார்.

இட்லி கடை திரை விமர்சனம் | Idli Kadai Movie Review

இந்த செய்தியை கேட்டவுடன் பாங்காக்கில் இருந்து உடனடியாக தனது ஊருக்கு வருகிறார் தனுஷ். தந்தையின் மரணத்தின் துயரத்தில் இருந்து மீளாமல் இருக்கும் தனுஷுக்கு அடுத்த அடியாக அவருடைய அம்மாவும் இறந்துபோக, சுக்குநூறாக உடைந்து போகிறார். ஆனால், மறுபக்கம் என்ன நடந்தாலும் திருமணம் நடக்கவேண்டும், இது நம் குடும்பத்தின் கவுரவ பிரச்சனை என சத்யராஜ் கூற, என்னால் திரும்பி வரமுடியாது என தனுஷ் சொல்கிறார். திருமணமும் நடக்காமல் போகிறது.

மறுபக்கம் தனது தந்தையின் இட்லி கடையை எடுத்து நடத்த தனுஷ் முடிவு செய்கிறார். அவருக்கு துணையாக நித்யா மேனன் என்ட்ரி தருகிறார். தனது தங்கையின் திருமணம் நின்றுபோன கோபத்துடன் தனுஷின் ஊருக்கு செல்லும் அருண் விஜய், தனுஷை அடித்து உதைக்கிறார்.

இட்லி கடை திரை விமர்சனம் | Idli Kadai Movie Review

ஆனால் தனுஷ் அமைதியாக அடிகளை வாங்கிக்கொள்ள, இட்லி கடையை அருண் விஜய் அடிக்க முற்படும்போது தனுஷ் திருப்பி அடிக்கிறார். இது மிகப்பெரிய பிரச்சனையாக மாறுகிறது. அருண் விஜய் Vs தனுஷ் என்கிற சூழல் ஏற்பட இதன்பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை.


படத்தை பற்றிய அலசல்


கதாநாயகன் தனுஷை பற்றி பிறகு பேசலாம், ஆனால் இயக்குநர் தனுஷை பற்றி முதலில் பேசியே ஆகவேண்டும். தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை அழகான, மிகவும் எமோஷனலான திரைக்கதையோடு நமக்கு வழங்கியுள்ளார். திரைக்கதையில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும், ஒரு இடத்தில் கூட போர் அடிக்கவில்லை.

இட்லி கடை திரை விமர்சனம் | Idli Kadai Movie Review

அதே போல், எமோஷனல் காட்சிகளை தனுஷ் சிறப்பாக இயக்கியுள்ளார். ராஜ்கிரணுக்கு பின் தனுஷ் அந்த கடையை எடுத்து நடத்துவது, சண்டைக்கு சண்டை போடுவது தீர்வு அல்ல, அகிம்சைதான் தீர்வு தரும் என சொன்ன விஷயம் சிறப்பு. அதை திரைக்கதையில் காட்சிகளாக அமைத்த விதமும் நன்றாக இருந்தது. அதே போல் தனுஷை அந்த ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தருணம், தனுஷுக்கு துணையாக தெய்வமாக ராஜ்கிரண் வந்து நின்றது, இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் என அனைத்துமே ரசிக்கும்படியாக இருந்தன.

ஆனால், Gen Z கிட்ஸுக்கு இந்த படம் ஓவர் எமோஷனலாக தெரிய வாய்ப்பு உள்ளது. எமோஷனலாக அவர்களுக்கு கனெக்ட் ஆகுமா என்பதும் கேள்விக்குறி தான்.

இட்லி கடை திரை விமர்சனம் | Idli Kadai Movie Review

படத்தில் வந்த கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ரசிக்கும்படியாக இருந்தது. குறிப்பாக அருண் விஜய், அவருடைய ஈகோ தனமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. இப்படியொரு கதாபாத்திரத்தை எந்த ஒரு முன்னணி நடிகரும் ஏற்று நடிக்க மறுப்பார்கள். அதை செய்த அருண் விஜய்க்கு தனி பாராட்டு. மேலும், கீதா கைலாசம் மற்றும் ராஜ்கிரண் கதாபாத்திரங்கள் மனதை தொடுகிறது. அவர்கள் கதாபாத்திரத்தை எழுதிய விதத்திற்கே தனுஷை பாராட்டலாம்.

பார்த்திபன் கேமியோ ரோல் என்றாலும் கடைசியில் கைதட்டல்களை அள்ளிவிட்டார். சத்யராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி ஆகியோரின் நடிப்பு நன்றாக இருந்தாலும், அவர்களுடைய கதாபாத்திரத்திற்கு நிறைய இடம் இருந்தாலும் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இட்லி கடை திரை விமர்சனம் | Idli Kadai Movie Review

இப்படத்திற்கு மற்றொரு பலம் என்றால் அது, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்தான். பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டிலும் பட்டையை கிளப்பி, படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறார். அதே போல், படத்தின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. அதற்கு ஒளிப்பதிவாளர் கிரணுக்கு பாராட்டுக்கள். எடிட்டிங் பக்கா. மற்ற டெக்னிக்கலான விஷயங்களில் குறை ஒன்றும் இல்லை.



பிளஸ் பாயிண்ட்


தனுஷ், அருண் விஜய்,  கீதா கைலாசம், ராஜ்கிரண்

கதைக்களமும் அழகான திரைக்கதையும்


மனதை தொடும் எமோஷனல் காட்சிகள்


பாடல்கள், பின்னணி இசை

ஒளிப்பதிவு


மைனஸ் பாயிண்ட்


மண்மணம் மாறாத கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சிட்டியில் வரவேற்பை பெறுமா என்பது கேள்விக்குறி தான். அது மட்டுமே மைனஸ் பாயிண்ட். மற்றபடி திரைக்கதையில் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், பெரிதாக மைனஸ் பாயிண்ட்ஸ் இல்லை.



மொத்தத்தில், இந்த இட்லி கடையில் வாழை இலை போட்டு சாப்பிட்ட இட்லியும், சாம்பாரும் செம சுவையாக இருந்தது. 

இட்லி கடை திரை விமர்சனம் | Idli Kadai Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *