Bhooth Bangla: திரை விமர்சனம்

Bhooth Bangla
அக்ஷய் குமார், பிரியதர்ஷன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் Bhooth Bangla காமெடி, ஹாரர் இந்தி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.
கதைக்களம்
வட இந்தியாவில் மங்கள்பூர் என்ற ஊரில் அரச குடும்ப நபரான துஷுந்த் ஆச்சார்யா உயிரிழக்க, லண்டனில் உள்ள அவரது மகன் வாசுதேவ் குடும்பத்திற்கு சொத்து குறித்து தெரிய வருகிறது.
அச்சமயம் வாசுதேவ் ஆஸ்திரேலியாவிற்கு கிளம்ப, அவரின் மகன் அர்ஜுன் (அக்ஷய் குமார்) தங்கை திருமணத்தை அரண்மனையில் நடத்த வேண்டும் என்பதற்காக இந்தியாவிற்கு கிளம்புகிறார்.
அரண்மனையை சுத்தப்படுத்தி திருமணத்தை நடத்தித் தர ஏற்பாட்டாளாராக ஜெக்தீஷ் வருகிறார்.
ஆனால், இங்கு திருமணத்தை நடத்தினால் மணப்பெண்ணுக்கு ஆபத்து நேரிடும் என ஷாந்தாராம் என்ற நபர் அர்ஜுனை எச்சரிக்கிறார்.
அவரை பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அர்ஜுன் தனது தங்கை மீராவின் (மிதிலா பல்கர்) திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்கிறார்.
அப்போது இரவு வேளையில் வௌவால் மனித உருவம் ஒன்று அரண்மனையில் உள்ளவர்களை பயமுறுத்துகிறது.
அத்துடன் அர்ஜுனையும் மோசமாக தாக்குகிறது.
அதன் பின்னணி என்ன? தங்கையின் திருமணத்தை அர்ஜுன் நடத்தினரா? போன்ற கேள்விகளுக்கு விடையே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
இயக்குநர் பிரியதர்ஷன், அக்ஷய் குமார் கூட்டணி 2007ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் காமெடி, ஹாரர் படத்தில் இணைந்துள்ளது.
இம்முறையும் பக்கா என்டர்டைன்மென்டை இவர்கள் கொடுத்துள்ளனர்.
முதல் பாதியில் ஆங்காங்கே ஹாரர் மொமெண்ட் வந்தாலும் காமெடிதான் தூக்கி நிறுத்துகிறது.
இரண்டாம் பாதியில் அடுத்தடுத்த ட்விட்ஸ்ட் மற்றும் கிளைமேக்ஸ் மிரட்டல் என திரைக்கதையில் விளையாடியிருக்கிறார்கள் பிரியதர்ஷன், ரோஹன் ஷங்கர் மற்றும் அபிலாஷ் நாயர்.
ஆகாஷ் கௌஷிக்கின் கதையை இயக்குநர் பிரியதர்ஷன் நேர்த்தியாக கையாண்டுள்ளார்.
அக்ஷய்குமார், பரேஷ் ராவல் மற்றும் ராஜ்பால் யாதவ் கூட்டணி காமெடியில் அட்டகாசம் செய்துள்ளது.
என்றாலும் ஆபாச காமெடி, உருவகேலி போன்றவற்றை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக காலணியை ராஜ்பால் சுத்தம் செய்யும் காட்சி முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருக்கிறது.
அதைத் தாண்டி பியானோவை எலி, பூனை வாசிப்பது அதைப் பார்த்து பரேஷ் பயப்படும் காட்சியெல்லாம் அல்ட்டிமேட் காமெடி.
இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் மிரட்டல். அதில் வரும் ஒரு காட்சி திகில் மொமெண்ட்.
நடிகர்களைப் பொறுத்தவரை அக்ஷய் குமார் படம் முழுக்க ஆட்சி செய்திருக்கிறார். ராஜ்பாலுடன் இணைந்து அவர் செய்யும் காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.
ஹாரர் படங்களுக்கே உண்டான க்ளிஷே காட்சிகள் இருந்தாலும் அவை ஒரு குறையாக தெரியாத வகையில் படம் நகர்கிறது.
என்னதான் வாமிகா கேபி ஹீரோயினாக இருந்தாலும் கெஸ்ட் ரோல் போல்தான் வந்துபோகிறார்.
ஆனால் தபு சில நிமிடங்களே வந்தாலும் ஸ்கோர் செய்துவிடுகிறார்.
அக்ஷய் குமாருக்கு அப்பாவாக ஜிஸ்ஷு சென்குப்தா நடித்திருப்பது எல்லாம் செம பொங்கு பாஸ். அவரது வயதான கெட்அப் ஒட்டவே இல்லை.
மிதிலா, பாவ்னா, அஸ்ராணி உள்ளிட்ட நடிகர்களும் சிறப்பான நடிப்பை தந்துள்ளனர்.
ப்ரித்தமின் பாடல்கள், ரோனி ரபேலின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
திவாகர் மணியின் ஒளிப்பதிவும், ஐயப்பன் நாயரின் படத்தொகுப்பும் சிறப்பாக அமைந்துள்ளன.
க்ளாப்ஸ்
அக்ஷய் குமார்
காமெடி காட்சிகள்
ட்விஸ்ட்கள்
திரைக்கதை
கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
முகம் சுளிக்க வைக்கும் ஒரு சில காட்சிகள்
மொத்தத்தில் இந்த பூத் பங்களா எல்லோரையும் சிரிக்க வைத்து பயமுறுத்தும். திரையரங்கில் ரசிக்கக்கூடிய படம்தான்.






