அமிதாப் பச்சன் படத்தில் நடித்தவர் படுகொலை: வெளியான பரபரப்பு தகவல்

அமிதாப் பச்சன் படத்தில் நடித்தவர் படுகொலை: வெளியான பரபரப்பு தகவல்


நாக்பூர்,

இந்தியில் நாகராஜ் மஞ்சுலே இயக்கி நடிகர் அமிதாப் பச்சன் நடித்த படம் “ஜுண்ட்”. இந்த திரைப்படம் ஸ்லம் சாக்கர் என்ற அரசு நிறுவனத்தின் நிறுவனர் விஜய் பார்சியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. ஓய்வுபெறும் தருவாயில் உள்ள விளையாட்டு ஆசிரியர் ஒருவர், குடிசைப்பகுதியை சேர்ந்த குழந்தைகளுக்காக ஒரு கால்பந்து அணியை உருவாக்குகிறார். அது அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை.

இந்தப்படத்தில் பாபு சேத்ரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் பிரியான்ஷு என்ற பாபு சேத்ரி(வயது21). இவர் நாக்பூர் நகரில் உள்ள லும்பினி நகர் பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் பாபு சேத்ரி நேற்று அதிகாலை 3 மணி அளவில் அங்குள்ள ஜரிபட்கா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீட்டின் அருகே அரை நிர்வாண நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். மேலும் அவரது கை, கால்கள் பிளாஸ்டிக் வயர்களால் கட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாபு சேத்ரியை மீட்டு அருகில் உள்ள மேயோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:- நடிகர் பாபு சேத்ரியின் நெருங்கிய நண்பர் துருவ் லால் பகதூர் சாகு(20). இருவரும் அடிக்கடி ஒன்றாக மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு பாபு சேத்ரியும், அவரது நண்பர் சாகுவும் மோட்டார் சைக்கிளில் ஜரிபட்கா பகுதியில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அமர்ந்து இருவரும் மது குடித்துள்ளனர்.

மதுபோதையில் 2 பேருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சாகு, பாபு சேத்ரியை கம்பியால் தாக்கி பிளாஸ்டிக் வயரால் கட்டிப்போட்டுவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து சாகுவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாபு சேத்ரி மற்றும் கைதான சாகு ஆகியோர் மீது திருட்டு மற்றும் தாக்குதல் வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *