2019ல் வெளியான சிறந்த தமிழ் படங்கள்.. என்னென்னெ பாருங்க

2019ல் கோலிவுட்டில் வெளியான சிறந்த படங்களில் லிஸ்ட் இதோ.
அசுரன்
வெற்றிமாறன் படம் என்றாலே அதில் எந்த அளவுக்கு விறுவிறுப்பு இருக்கும் என அனைவருக்கும் தெரியும். அப்படி படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட படம் தான் அசுரன்.
அக்டோபர் 4, 2019ல் இந்த படம் ரிலீஸ் ஆனது. தனுஷின் நடிப்பு, ஜி.வி.பிரகாஷின் இசை, வெற்றிமாறன் இயக்கம் என மூன்றும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றிருக்கும். மஞ்சு வாரியர் நடிப்பும் பாராட்டப்பட்டது.
ஒடுக்குமுறைக்கு எதிரான சமூக அரசியல் பேசி, படிப்பு தான் முக்கியம், அதை தன் வேறு யாராலும் நம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ள முடியாது என படம் சொன்ன கருத்து தான் ஹைலைட்.
கைதி
25 அக்டோபர் 2019ல் ரிலீஸ் ஆனது கைதி படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான இந்த படம் ஒரு நாள் இரவில் நடக்கும் கதை.
தண்டனை முடிந்து ஜெயிலில் இருந்து வெளியில் வரும் கார்த்தி, பெரிய சிக்கலில் மாட்டி இருக்கும் போலீசுக்கு உதவுகிறார்.
ஒரு பெரிய போதைப்பொருள் கும்பல் எதிராக வருகிறது. அவர்களை எல்லாம் எப்படி சமாளித்தார் என்பது தான் இந்த படத்தின் கதை.
சூப்பர் டீலக்ஸ்
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 29 மார்ச் 2019 அன்று ரிலீஸ் ஆன படம் சூப்பர் டீலக்ஸ்.
சமூகத்தில் இருக்கும் பல வித்தியாசமான கதாபாத்திரங்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள். அதில் ஒருவர் செய்யும் விஷயம் மற்றொருவர் வாழ்க்கையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த படம் காட்டி இருக்கும்.
திருநங்கை ஆக நடித்த விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன் என பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.
ஒத்த செருப்பு சைஸ் 7
எப்போதும் வித்தியாசமான படங்கள் எடுக்கும் நடிகர் பார்த்திபனின் முக்கிய படம் தான் இந்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’.
20 செப்டம்பர் 2019ல் இது ரிலீஸ் ஆனது. படம் முழுக்க பார்த்திபன் மட்டுமே நடித்து இருப்பார். அவரே நடித்து எழுதி, இயக்கி, தயாரித்து இருந்தார்.
நேர்கொண்ட பார்வை
ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. அதில் அஜித் வயதான ரோலில் நடித்தது தான் பெரிய அளவில் பேசப்பட்டது.
No means No என்கிற முக்கிய விஷயத்தை இந்த கதை சொல்லி இருக்கும். 8 ஆகஸ்ட் 2019ல் இந்த படம் வெளிவந்திருந்தது.
ஆடை
அமலா பால் துளி கூட ஆடை இல்லாதது போல இந்த படம் முழுக்க நடித்து இருப்பார். ஆடைகள் இல்லாமல் ஒரு இடத்தில சிக்கிக்கொண்ட நிலையில் அங்கிருந்து எப்படி வெளியில் செல்ல அவர் முயற்சிக்கிறார் என்பது தான் மொத்த படமும்.
ரத்னகுமார் இயக்கிய இந்த படம் 19 ஜூலை 2019ல் வெளியாகி இருந்தது.