Women don’t have to save culture – “Bad Girl” director | கலாச்சாரத்தை பெண்கள் காப்பாற்ற வேண்டியதில்லை

Women don’t have to save culture – “Bad Girl” director | கலாச்சாரத்தை பெண்கள் காப்பாற்ற வேண்டியதில்லை


சென்னை,

காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேட் கேர்ள்’. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் திரிவேதி மேற்கொண்டுள்ளார். இப்படம் ஒரு டீனேஜ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. கோவாவில் நடைபெற்ற 54-வது சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு விருது வென்றது குறிப்பிடத்தக்கது. படத்தின் டீசரில் சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் அதிக அளவில் உள்ளதாகவும், இது பாலியல் குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கி, தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. சென்சார் தரப்பில் இருந்து பல காட்சிகளை நீக்க வேண்டும் என கூறியதால், படக்குழு நீதிமன்றம் சென்று போராடி படத்திற்கு சென்சார் வாங்கி, படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. படம் வருகிற 5ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் வர்ஷா, “நம் ஊரில் மண்ணையும் பெண்ணையும் காப்பாற்றுவோம் எனச் சொல்பவர்கள்தான் இப்படத்தை உருவாக்கியவர்களின் வீட்டுப் பெண்களின் புகைப்படங்களைப் பொதுவெளியில் பகிர்ந்தனர். இதிலிருந்தே அவர்களின் அரசியலும் மோசமான மனநிலையும் தெரிகிறது. எங்களால் கலாசாரம் சீரழிகிறது என்கின்றனர். பல படங்களில் பெண்களை எப்படி சித்தரிக்கிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம். அவர்களில் பலரும் பெண்களை பெண்ணாக படமாக்குவதில் பிரச்னை இல்லை. ஆனால் அவர்களை பாலியல் பண்டமாக படமாக்குவதை பார்த்து வருகிறோம். அது கைவிடப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ‘பேட் கேர்ள்’ படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டு படம் கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்று கூறுகிறார்கள். கலாசாரம்தான் பெண்களைப் பாதுகாக்க வேண்டும். பெண்கள் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டிய தேவையில்லை. அது பெண்களின் வேலையும் அல்ல. கடவுளும் கலாச்சாரமும் தான் பெண்களை காக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். வர்ஷாவின் இந்த பேச்சுக்கு ஆதரவும் விமர்சனமும் எழுந்துள்ளது.

இயக்குநர் வர்ஷா பேச்சுக்கு இயக்குநர் வெற்றிமாறன் கை தட்டி தனது ஆதரவைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *