Vijay may have been opposed on principle. Leave it like this? – Actor Mansoor Alikhan | விஜய்யை கொள்கை ரீதியாக எதிர்த்திருக்கலாம். அதை விட்டு இப்படியா?

சென்னை,
கரூரில் விஜய்யின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக தற்போது அதிகரித்து இருக்கிறது.உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக விஜய் அறிவித்து இருக்கிறார். மேலும் கரூருக்கு நேரில் சென்று இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல அனுமதி கேட்டிருக்கிறார் விஜய். போலீஸ் பாதுகாப்பு அனுமதி தர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. மேலும் கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் மன்சூர் அலிகான், ‘ஓடிக் கொண்டே இருடா’ என்ற புதிய ஆல்பம் பாடலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: “தமிழ்நாட்டில் கரூர் சம்பவம் மனதிற்கு வேதனையாக இருக்கின்றது. என்னுடைய சொந்த ஊர் கரூர், பள்ளப்பட்டி. 2 நாட்களாக தூங்கவில்லை. எப்படி தூங்க முடியும்? அந்த நெரிசலில் சிக்கி மரணித்தவர்கள் எப்படி வேதனையை அனுபவித்து இருப்பார்கள்? நம்முடைய நாட்டில் இப்படி நடப்பது ரொம்ப அவமானமாக இருக்கிறது. கரூர் சம்பவம் தொடர்ந்து அரசியலாக்கப்படுவது குறித்த கேட்கிறீர்கள். அரசியலாக்குவது உண்மை தானே. லியோ படத்தின் நிகழ்ச்சியில் விஜய்யை நான் வாழ்த்தினேன். ‘நாளைய தீர்ப்பு’ என்று சொன்னேன்.
விஜய்யின் வளர்ச்சி பிடிக்காமல் அவரை நேரடியாக எதிர்க்க வேண்டும் என்றால் கூட்டங்களை நடத்தி கொள்கைரீதியாக எதிர்த்து இருக்கலாம். அதை விட்டு இப்படியா? அயோக்கியத்தனமான அரசியல் தானே இது? சொந்த மண்ணில் சொந்த மக்களைக் காவு கொடுப்பதா? யார் தான் அரசியலுக்கு வர வேண்டும்? என்பதை இன்னும் 6 மாதங்களில் தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள். அரசியலில் சிலர் கோமாளித்தனமாக நடக்கிறார்கள். சிலர் வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார்கள். சிலர் திமிங்கிலம் போல அடக்க ஆள் இல்லாதது போல் நடந்து கொள்கிறார்கள்.
நான் விஜய்க்கு ஆதரவு தருகிறேன். நான் வளர்த்து விட்ட தம்பி விஜய். அருணா ஜெகதீசன் தலைமையான விசாரணை குறித்த விசாரணையால் எதுவும் நடக்காது. முறையாக போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை. எந்த கட்சிக்காவது இவ்வளவு நிபந்தனை விதித்தார்களா? இவ்வளவு கெடுபிடி இருந்ததா? 41 பேரின் மரணத்துக்கு விஜய் எந்த பதிலும் சொல்லவில்லை என்று சொல்கிறீர்கள். அவரை தான் அங்கே இருக்க விடாமல் கிளம்ப சொல்லி அனுப்புகிறார்கள். பிறகு எப்படி அவர் பேசுவார்? இது திட்டமிட்ட சதி. இதற்கான தண்டனை 6 மாதத்தில் கிடைக்கும். தவறு செய்தவன் தண்டனை அனுபவிப்பான். விஜய்க்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியும்” என நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.