Vetimaaran praised Suriya at the Agaram function

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “வேடிக்கை பார்க்க வந்த எனக்கே இவ்வளவு நெகிழ்ச்சியாக உள்ளது. அகரத்தை வழிநடத்தி வரும் சூர்யாவுக்கு, அவரது குழுவுக்கும் இது எவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கும் என்பதை உணர முடிகிறது. இங்கே மாணவர்கள் பேசும்போது நான் நினைத்தது ஒன்று தான். இந்த அகரம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த மாணவர்களின் நிலை என்னவாக ஆகியிருக்கும் என்பது தான் என் மனதில் ஓடியது.
எல்லோருக்கும் ஒரு காலக்கட்டத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்கும். நம் கையில் பொருளாதார வசதியும், சமூக செல்வாக்கும் இருக்கும். அந்த காலக்கட்டத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதை முடிவெடுக்கும்போது தான் நாம் யார் என்பது தீர்மானமாகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் அவர் நினைத்திருந்தால் சூர்யா வேறு எதை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். கம்பெனி உருவாக்கலாம் என நினைத்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தாண்டி ‘விதை’ என்ற திட்டத்தின் மூலம் கல்வி கொடுக்க வேண்டும் என நினைத்திருக்கிறார்.
அந்த கல்வி யாருக்கு சென்று சேர வேண்டும், சரியானவர்களை தேர்வு செய்வது சவாலானது. அகரம் ஒரு கை என்றால் மற்றொரு கை மாணவர்களுடையது. ஆக அப்படிப்பட்ட மாணவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு முறை உட்பட அனைத்தும் சிறப்பானது. நேரம், பொருளாதாரம் எல்லாவற்றையும் தாண்டி, என்னிடம் இருப்பதை பகிர தயாராக இருக்கிறேன் என முடிவெடுப்பது தான் நம்மை தனித்துவமான இடத்தில் வைக்கிறது. இந்த சமூகம் நமக்கு ஒரு இடத்தை கொடுத்திருக்கிறது. நாம் அதற்கு என்ன திருப்பி கொடுக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் அனைவருக்கும் நன்றி. இந்த மாணவர்களின் சாதனை மூலம் ஒரு தலைமுறையை ஒரு படி முன்னேற்றிய இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைத்ததற்கு நன்றி” என்றார்.