Thirumavalavan should have come as the hero – Director Subramaniam Siva | திருமாவளவன் ஹீரோவாக வந்திருக்க வேண்டியவர்

சென்னை,
திருவள்ளுவரின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘திருக்குறள்’ படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மற்றும் நடிகர் சுப்ரமணியம் சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்துப் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் இளையராஜா அவர்களின் இசையில் உருவாகியுள்ள ‘திருக்குறள்’ என்னும் திரைப்படத்தின் இசை தகடை திருமாவளவன் வெளியிட்டார்.
சுப்ரமணியம் சிவா பேசுகையில், “இன்று இருக்கக்கூடிய தலைவர்களில் முக்கியமான தலைவராக, சிறந்த தலைவராக, எல்லோருக்குமான தலைவராக இருக்கக்கூடியவர் அண்ணன் திருமாவளவன். நான் 1999-ல் தஞ்சாவூரில் பூச்சி மருந்துகள் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது பல கிராமங்களுக்குச் சென்று பூச்சி மருந்துகளை பரிந்துரை செய்வேன். அங்கிருப்பவர்கள் என்னிடம் வெவ்வேறு பூச்சி பெயர்களையும் என்னிடம் சொல்வார்கள். அப்போது அந்தக் கிராமங்களில் ‘அத்துமீறி அடங்கமறு’ என திருமா அண்ணனுடைய பெயரைத்தான் எழுதியிருப்பார்கள்.
எப்படி அந்தக் கிராமங்களுக்கு அவர் போய் சேர்ந்தாரென்று எனக்கு அப்போது ஆச்சரியமாக இருக்கும். திருமா அண்ணன் ஒரு ஹீரோவாக ஆகியிருக்க வேண்டியவர்.அப்போது ஒரு போட்டோஷூட்கூட பண்ணினார்கள். அதைப் பார்த்ததும், விஜயகாந்த் மாதிரி இன்னொருவர் வந்துட்டார், முரளியோட அண்ணன் மாதிரி ஒருத்தர் வந்துட்டார்னு நினைச்சிருப்போம். அவருடைய இடைவிடாத அரசியல் பணியால் நம் தமிழ் சினிமாவுக்கு ஒரு ஹீரோ கிடைக்காமல் போய்விட்டார்” என்று கூறினார்.