There are many secrets in the film “Diesel” – Director Shanmugam Muthusamy | “டீசல்” படத்தில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது

ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான ‘டீசல்’ படத்தை சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து பீர் கானா பாடல் வெளியாக வரவேற்பை பெற்றது.
நாளை வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் சண்முகம் முத்துசாமி பேசும் போது, “டீசல் படம் ஆரம்பித்ததில் இருந்து வெளியீடு வரை எந்த சோர்வும் இல்லாமல் உழைத்த அனைவருக்கும் நன்றி. காதல் படங்கள், பேமிலி சப்ஜெக்ட் எல்லாம் நிறைய பார்த்தாச்சு. ஏதாவது புதிதாக கதை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பெட்ரோல் பங்க்கில் நின்ற டேங்கர் லாரியிலிருந்து பக்கெட் பக்கெட் ஆக பெட்ரோல், டீசலை சிறுவர்கள் திருடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை பின்தொடர்ந்து சென்றபோது தான் இந்த அதிர்ச்சிகரமான உலகம் பற்றி தெரிய வந்தது. இதையே படமாக்கலாம் என்று உருவானதுதான் ‘டீசல்’.
இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றி நாங்கள் நிறைய தெரிந்து கொள்ள முயற்சித்தபோது உயிர் பயம் வரை அச்சுறுத்தல் நிகழ்ந்தது. இந்த மாபியாவால் ஒரு சாதாரண மனிதன் எந்த அளவுக்கு நேரடியாக பாதிக்கப்படுகிறான் என்பதை இதில் சொல்லியிருக்கிறோம். இந்த ‘டீசல்’ படத்தில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது. டேங்கர் லாரியில் இருந்து எண்ணெய் கொட்டுவது போல தயாரிப்பாளர் தேவராஜூலு சார் இந்தப் படத்திற்காக பணம் கொட்டியிருக்கிறார். ‘பாகுபலி’, ‘கத்தி’ போன்று அடுத்தடுத்து ரூ.100 கோடி வசூல் செய்யும் பெரிய படங்களை நீங்கள் தயாரிக்க வேண்டும்” என்று பேசியுள்ளார் சண்முகம் முத்துசாமி.