The love and support of the people of Nellai encouraged me a lot – Ilayaraja | நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது

நெல்லை,
1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
நேற்று திருநெல்வேலி சென்ற இளையராஜா நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருநெல்வேலியில் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையான நான்கு வழிச்சாலையையொட்டி ரெட்டியார்பட்டி பகுதியில் திறந்தவெளி திடலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் என்ற அளவுக்கு பல்வேறு வகையான டிக்கெட் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன.பொங்கல் விடுமுறையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பதிவில் ‘ நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது! நான் முன்பு பதிவிட்டது போல் எனது கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும். அடுத்து எந்த ஊர்..?’ என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் இவரது இசையில் வெளியான ‘விடுதலை 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீப காலமாக வெளியான பல படங்களில் இவரது பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.