That one question Vijay asked made me quit acting – Actress Roja | விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வியால் நடிப்பை விட்டே ஒதுங்கினேன்

நடிகை ரோஜா செல்வமணி தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். தெலுங்கில் அனைத்து நட்சத்திர ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் 90களின் துவக்கத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. கமல்ஹாசன் தவிர்த்து அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்த இவர், இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு ஒதுங்கினார். பின்னர் ஆந்திர அரசியலிலும் நுழைந்து எம்எல்ஏ, அமைச்சராக பொறுப்பு வகித்தார். தற்போதும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் சினிமாவை விட்டு கிட்டத்தட்ட ஒதுங்கிய சமயத்தில் தான், விஜய்யுடன் ‘நெஞ்சினிலே’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆகியிருந்தார். அதன்பிறகு சில வருடங்கள் கழித்து விஜய்யின் காவலன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஆகியவற்றில் மட்டும் அவ்வப்போது தலை காட்டி வந்தார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் சினிமாவில் நடிக்காததற்கு விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி தான் காரணம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுமபோது, “விஜய்யுடன் நெஞ்சினிலே படத்தில் தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா என்கிற ஒரு பாடலில் மட்டும் நடனமாடி இருந்தேன். அப்போது விஜய் கொஞ்சம் ரிசர்வ்டு டைப்பாக அதிகம் பேசாமல் இருந்தார். சில வருடங்கள் கழித்து காவலன் படத்தில் நடிகை அசின் அம்மாவாக நடித்தேன். அந்த படப்பிடிப்பில் என்னை பார்த்து அதிர்ந்து போன விஜய், மேடம் நீங்கள் எனக்கு மாமியாராக நடிக்கிறீர்களா ? சும்மா சொல்கிறிர்கள் என்றுதான் நினைத்தேன். என்னால் நம்ப முடியவில்லை.. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. உங்களை நாங்கள் இன்னும் நாயகியாகவே பார்த்து வருகிறோம் என்று சொன்னார்.
விஜய் மட்டுமல்ல தெலுங்கில் நடிகர் கோபிசந்த்துடன் அவருக்கு மாமியார் கதாபாத்திரத்தில் நடித்தபோது இதேபோன்று தான் அவரும் தனது வியப்பை வெளிப்படுத்தினார். அவர்களின் அந்த வார்த்தையை கேட்டதும் இனி அம்மா, மாமியார் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்து ஒதுங்கினேன், தற்போது அரசியலில் கொஞ்சம் ஓய்வு நேரம் அதிகமாக இருப்பதால் ரம்யா கிருஷ்ணனுக்கு பாகுபலி கிடைத்தது போல எனக்கும் மீண்டும் நல்ல முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பதற்கு தயார்” என்று கூறியுள்ளார்.






