Tamil Nadu government takes care of students like a mother and father – Director Mysskin | தமிழக அரசு, தாய் தந்தையை போல மாணவர்களை பார்த்துக் கொள்கிறது

தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி சாதனையின் கொண்டாட்டமாக ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி, நான் முதல்வன், முத்லவரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், விளையாட்டின் சாதனையாளர்கள், சிறப்புக் குழந்தை சாதனையாளர்கள் இது போன்ற ஏழு திட்டங்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்நிகழ்வினில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி கலந்து கொண்டார். இவர்களை தவிர்த்து திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். சிவகார்த்திகேயன், மிஷ்கின், தியாகராஜா குமாரராஜா, பிரேம் குமார், தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், “ஒரு கையழுத்து பிரதியை அண்ணா அடிக்கடி படித்தாராம். இவ்வளவு அழகா எழுதும் அந்த இளைஞனை நான் பார்க்கனும்னு சொன்னாராம். அந்த இளைஞனை அண்ணா முன் நிறுத்திய போது அந்த இளைஞனுக்கு 14 வயது. அவர் தான் கலைஞர். அண்ணா அதிர்ச்சியாகிவிட்டார். என்னப்பா, நான் ஒரு 30 வயசு ஆம்பளைன்னு நினைச்சா நீ 14 வயசுன்னு சொல்ற… ஸ்கூலுக்கு போலையான்னு கேட்டார். நான் ஸ்கூலுக்கு போறதில்லைன்னு கலைஞர் சொல்றார். அப்படிலாம் இருக்கக்கூடாது, முதல்ல ஸ்கூலுக்கு போ, அப்புறம் தான் அரசியல், போராட்டமெல்லாம்னு சொல்லி அனுப்பிவிடுகிறார்.
அண்ணா சொன்னதை கலைஞரால் தட்ட முடியவில்லை. அதனால் சொல்லை தட்டியது அண்ணாவுக்கு தெரியக்கூடாது என ஸ்கூலுக்கே போகாமல் இருந்தார். அவர் ஸ்கூலுக்கு போகாமல் இருந்ததால் தான் இப்ப நீங்க(மாணவர்கள்) ஸ்கூலுக்கு போறீங்க. அதனால் அதை மறக்கவே கூடாது. நாங்க இன்னமும் அவர் செய்த திட்டத்தை படிச்சிக்கிட்டே இருக்கோம். இப்பக்கூட நாங்க கார்ல வரப்போ, ஒரு பஸ்ஸில் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் சிறகு என ஒரு திட்டம் இருப்பதை படித்தோம். நான் அரசியலுக்கு அப்பார்பட்டவன். இருந்தாலும் முதல்வர் குடும்பத்தோடு நான் எப்போதுமே தொடர்பில் இருக்கிறேன். நான் அரசு பள்ளியில் படிக்கும் போது எந்த உதவியுமே இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டு படிச்சேன். ஆனால் இன்று நம் அரசும், துணை முதல்வரும், அமைச்சர் அன்பில் மகேஷும் நிறைய உதவி செய்கிறார்கள். ஒரு தாய் தந்தையை போல மாணவர்களை பார்த்துக் கொள்கிறார்கள்.
உலகத்தில் மிகச்சிறந்த ஆளுமை என்று கருதப்படுகின்ற இளையராஜாவுக்கு விழா எடுத்ததற்கு முதல்வரின் காலை தொட்டு கும்பிட்டுக்கொள்கிறேன். உலகத்தில் எந்த அரசும் ஒரு இசைக்கலைஞனுக்கு எடுக்காத ஒரு விழாவை முதல்வர் ஐயா எடுத்ததற்கு அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். இதைவிட இளையராஜா சாதித்தது எதுவுமே இல்லை. அந்த விழாவை உலகத்தில் இருக்கிற அனைத்து தமிழர்களும் பார்த்தார்கள்” என்றார்.