Sachin praises music composer Thaman

தொடர்ச்சியாக பல படங்களுக்கு இசையமைத்து தான் இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர் என்பதை தமன் நிரூபித்து வருகிறார். அவர் கடைசியாக பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுஜீத் இயக்கியிருந்த இப்படத்தை டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருந்தது. இப்படம் 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.308 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது.
இப்படத்தின் புரொமோஷனுக்காக தமன் அமெரிக்கா சென்றிருந்தார். பின்பு முடித்துவிட்டு துபாய் சென்றார். அப்போது அவர் பயணித்த அதே விமானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் பயணித்துள்ளார். இதனை அறிந்த தமன் அவரை சந்தித்து பேசியுள்ளார். அந்த அனுபவத்தை அவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சச்சினை சந்தித்து பேசியது குறித்து தமன், “கிரிக்கெட்டின் கடவுள் தி லெஜண்ட் உடன் பயணத்தேன். டல்லாஸிலிருந்து துபாய் வரும் வரை அருமையான நேரமாக அமைந்தது. என்னுடைய சிசிஎல் போட்டிகளின் போது பேட்டிங் செய்த வீடியோக்களை அவருக்கு காட்டினேன். அப்போது மாஸ்டர் சச்சின் “உங்களிடம் சிறந்த பேட்டின் வேகம் இருக்கிறது” என்று கூறினார். அந்த வார்த்தைகளை மறக்க முடியாது. விரைவில் அவருடன் பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமன் தற்போது கையில் பல படங்களை வைத்திருக்கிறார். ‘தி ராஜா சாப்’, ‘அகண்டா 2’, ‘என்பிகே111’, சிரஞ்சீவி, திரிவிக்ரம் படம் உள்ளிட்டவை அதில் அடங்கும்.