S.P.B.’s Memorial Day: There is not a day that goes by that I don’t think of you – Poet Vairamuthu | எஸ்.பி.பி நினைவு நாள்: உன்னை நினைக்காத நாளில்லை

சென்னை,
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி மரணம் அடைந்தார்.
அவர் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை என பெயரிடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் பெயர் சூட்டப்பட்ட சாலை அறிவிப்பு பலகையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார்.
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவு தினத்தையொட்டி திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்
“பாசமுள்ள பாட்டுக்காரா!
நினைவு நாளில் அல்ல
உன்னை
நினைக்காத நாளில்லை
நீ பாடும்போது
உடனிருந்த நாட்கள்
வாழ்வின் நிம்மதி நிமிடங்கள்
‘பொன்மாலைப் பொழுது’
உன் குரலின்
அழகியல் வசீகரம்
‘சங்கீத ஜாதிமுல்லை’
கண்ணீரின் திருவிழா
‘காதல் ரோஜாவே’
கவிதைக் கதறல்
‘வண்ணம்கொண்ட
வெண்ணிலவே’
காதலின் அத்வைதம்
‘பனிவிழும் மலர்வனம்’
சிருங்காரச் சிற்பம்
‘காதலே என் காதலே’
தோல்வியின் கொண்டாட்டம்
ஒவ்வொரு பாட்டிலும்
உனக்குள்ளிருந்த நடிகனைக்
கரைத்துக் குழைத்துப்
பூசியிருப்பாய்
உன் வரவால்
திரைப்பாடல் பூச்சூடிநின்றது
உன் மறைவால்
வெள்ளாடை சூடி நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.