Progress is happening in society for women – Director Sudha Kongara | பெண்களுக்காக சமூகத்தில் முன்னேற்றம் நடக்கிறது

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம்,‘பராசக்தி’. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது. ஆனால் படத்தை 10ம் தேதியே வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பராசக்தி பட உலகம் ஒரு கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர் ‘பராசக்தியின் உலகம்’ கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டனர்.
இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா “மக்களின் வரவேற்பால் கண்காட்சியை இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்துள்ளோம். மற்ற ஊர்களுக்கும் இதை கொண்டு போக திட்டமிட்டுள்ளோம். இந்த கண்காட்சி படத்துக்கு ஒரு அறிமுகம். இப்படம் 1960களில் நடப்பதால் இப்போது இருக்கும் ஜென்-சி தலைமுறைக்கு அது பற்றி தெரியாது. அவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு” என்றார்.
பெண் இயக்குநர்களின் வளர்ச்சி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சுதா கொங்கரா, “ஆண் பெண் என்பதை தாண்டி இயக்குநரை இயக்குநராக மட்டும் பார்க்க வேண்டும். நான் இப்போது பெரிய படம் எடுக்கிறேன். இன்னும் பலர் அப்படி எடுக்கிறார்கள். இனிமேல் எங்களை ஒரு இயக்குநராக மட்டும் தான் பார்ப்பார்கள் என்று ஆசைப்படுகிறேன். பெண் இயக்குநர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். அதற்காக சில தடைகளும் இருக்கிறது. அதை உடைத்து முன்னேற வேண்டும்.
ஆண் இயக்குநர் பெண் இயக்குநர் என்பது இப்போது இல்லை. அப்படி இருந்திருந்தால் பெரிய ஹீரோக்கள் என்னை அணுகியிருக்க மாட்டார்கள். எல்லா மொழிகளிலிருந்தும் பெரிய ஹீரோக்கள் என்னை அழைக்கிறார்கள். பெண்கள் என்றால் சிறிய பட்ஜெட்டில் படம் எடுப்பார்கள், கமர்ஷியலாக எடுக்கத் தெரியாது என்பது இப்போது இல்லை. எல்லாம் மாறிவிட்டது. பெண்களுக்காக சமூகத்தில் ஒரு முன்னேற்றம் நடக்கிறது. இதுதான் ஒரு பெரிய சாதனை” என்றார்.






