Popular music composer posted against Vijay

சென்னை,
நடிகர் விஜய் தனது கட்சி தொண்டர்களை சந்திக்கும் விதமாக வாராவாரம், ‘உங்கள் விஜய் நா வரேன்’ என்கிற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை அறிவித்தார். அதன்படி கடந்த வாரம் சனிக்கிழமை கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பயணம் செய்து சந்தித்தார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் அவர் வருகையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு பலரும் விஜய்க்கு எதிராக கண்டனத்தை எழுப்பிவருகிறார்கள்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில், “நேற்று வரை நம்மோடு பேசித்திரிந்த 41 பேர் கூட்ட நெரிசலில் நசுங்கி, மூச்சுதிணறி, கொடுமையாக மரணித்திருக்கின்றனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், மூவர் என பல்வேறு விதமான இழப்புகள். கரூர் முழுவதும் மரண ஓலம். குடும்பங்களில் ஒப்பாரி. இழவு வீடுகளில் வெறுமையைப் பார்த்துக்கொண்டு அம்மா, அப்பா, கணவன், மனைவி, பெற்றோர் என எல்லோரும் விவரிக்கமுடியாத விரக்தியில் அமர்ந்திருக்க – “WE STAND WITH VIJAY” என்று கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் சமூக ஊடகங்களில் செய்தி பரப்புகிறீர்களே, வீணாய்ப் போனவர்களே!
உனக்கு என்ன நடந்தால் நீ திருந்துவாய்?எது நடந்தால் உனக்கு இழப்பின் அருமை புரியும்?ஒரு விபத்தின் அடிப்படை உண்மைகளை விளங்கிக்கொள்ள முடியாத அளவுக்கா உன் அறிவு மழுங்கியிருக்கிறது?ஒரு நடிகனை ரசிப்பது உன் மனசாட்சியைக் கொல்லும் அளவிற்கா கொண்டுபோய் விடும்?
அவன் நடித்து புகழும், பணமும் ஈட்டியதைவிட உனக்காக என்ன செய்துவிட்டான்? எதற்காக 41 உயிர்களின் இழப்பைக் கூட கொச்சைபடுத்தும் அளவிற்கு தரம்தாழ்ந்து போனாய்? தமிழ்நாட்டை வியந்துபார்க்கும் பிற மாநிலங்களும், பிற நாடுகளும், நம்மை ஏளனமாய் பார்க்கவைத்து விட்டீர்களே! மரணித்தவரின் ஆன்மாக்கள் உங்களை விடாது! பேய்கள் உங்களைத் துரத்தும்! உங்கள் வாழ்வு சிறக்காது! அவைகளின் சாபம் உங்களை விரட்டிப் பிடிக்கும்! கொடுமையின் உச்சத்தை நீ அனுபவிக்கும் முன் திருந்திவிடு!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் இசையமைப்பாளராக சாதித்தது மட்டுமின்றி, தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்துள்ளார். சுப்ரமணியபுரம் படம் மூலம் இசையமைப்பாளராக ஜேம்ஸ் வசந்தன்தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த பாடல் அனைத்தும் ஹிட்டானது. மேலும் தற்போது இவர் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறார்.