Plans to make “Lokah” into 5 parts – Dulquer Salmaan | “லோகா” படத்தை 5 பாகமாக உருவாக்க திட்டம்

துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் ‘லோகா: சாப்டர் 1 – சந்திரா’ படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 28 ம் தேதி வெளியானது.இப்படத்தில், பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சூப்பர்வுமன் படமாக உருவாகி இருக்கும் ‘லோகா: சாப்டர் 1 – சந்திரா’ எனும் மலையாளத் திரைப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது. இப்படத்தை டோமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார். திரைக்கு வந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மர்மங்கள் நிறைந்த கல்யாணி பிரியதர்ஷனின் கதாபாத்திரமும் உருவாக்கமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. திரைப்படம் தமிழில் இன்று வெளியானது. இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தமிழ் நாட்டில் வெளியிடுகிறது.
கல்யாணி பிரியதர்ஷன் நடித்த “லோகா: சாப்டர் 1 – சந்திரா” படம் உலக அளவில் ரூ.101 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மக்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லோகா: சாப்டர் 1 – சந்திரா’ படம் மலையாளம் தாண்டி நாடு முழுவதும் ஹிட் ஆகியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து வெற்றி விழாவில் சந்திப்பில் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் பேசும் போது, “நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை, ஒரு டீச்சராக பசங்களை கூட்டி வந்துள்ளேன். நாங்கள் இதை கேரளா அளவில் சின்னதாகத் தான் ஆரம்பித்தோம் இப்போது எல்லா இடத்திலும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இதில் உழைத்த எல்லோரும் அவர்கள் படம் போல உழைத்தார்கள் இந்த வெற்றி அவர்களுக்கானது தான்.கல்யாணியைத் தவிர இந்தப் படத்திற்கு வேறு யாருமே செட் ஆக மாட்டார்கள் என்ற அளவிற்கு அவர் பொருத்தமாக இருந்தார். கதை சொன்ன மறுநாளே அவர் டிரெய்னிங் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் நினைத்ததை விட சிறப்பாக செய்துள்ளார். நேரடித் தமிழ்படம் போல இப்படத்தை டப்பிங் செய்து தந்த பாலா சாருக்கு நன்றி. இந்த அளவு வரவேற்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை.
இப்படத்தை ஐந்து பாகமாக எடுக்க திட்டமிட்டுள்ளோம். நான் எத்தனையோ படங்கள் நடித்துள்ளேன் இந்த அளவுக்கு வரவேற்பைப் பார்க்கவில்லை. அதற்கான மரியாதையாக உடனே அடுத்தடுத்த பாகங்களை உருவாக்குவோம். லோகா மாதிரி இன்னும் அடுத்தடுத்து படங்கள் தருவோம். என் பேனரில் நான் மட்டுமே நடிக்க வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை. எனக்கு சினிமா அவ்வளவு பிடிக்கும், என் பேனரில் மற்றவர்கள் நடிக்கும் படங்களும் தயாரித்து வருகிறோம்” என்று பேசினார் துல்கர் சல்மான்.