One year has passed since the release of the film ‘Vettaiyan’ – Director Gnanavel | “வேட்டையன்” திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி வெளிவந்த திரைப்படம் ‘வேட்டையன்’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, பகத் பாசில், அமிதாப் பச்சன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்தனர். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இப்படத்தில், அனிருத் இசையமைத்த ‘மனசிலாயோ’ பாடல் வெளியீட்டுக்கு முன்பே பெரிய கவனம் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் அதிக அளவில் ரீல்ஸ் செய்யப்பட்டது.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இன்றுடன் வெளிவந்து ஓராண்டு ஆகிவிட்டது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். மேலும், படத்தின் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “ஜெய்பீம் மூலமாக எனக்கு கிடைத்த மிகவும் பிரியமான பரிசு ‘வேட்டையன்’.எனது திரைப்பயணத்தில், புதிய உயரங்களை அடைய அயராது பாடுபட்டு, சிகரங்களைத் தானே மறுவரையறை செய்யும் ஒரு ஜாம்பவான், சூப்பர் ஸ்டாரை இயக்கும் பாக்கியம் கிடைத்தது ஒரு முக்கியமான மைல்கல். உச்சத்தை அடைந்தவர்களுக்கு பல உதாரணங்கள் உள்ளன, ஆனால் ஐயா, ஒருவர் உச்சத்தை அடைந்த பிறகும், எப்படி இருக்க வேண்டும் என்பதை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தது நீங்கள்தான். உங்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி ஐயா.
இந்திய சினிமாவின் மறுக்க முடியாத இரண்டு வாழும் ஜாம்பவான்களுக்கு ( ரஜினிகாந்த் – அமிதாப்பச்சன்) ‘ஆக்ஷன்’ & ‘கட்’ என்று ஒரே நேரத்தில் சொன்னது எனக்கு ஒரு கனவு போலவே இருந்தது, மேலும் ஒரு ஆசீர்வாதமாக மாறியது. பகத் பாசில் உடன் பணிபுரிவது ஒரு நிறைவான கலை அனுபவம்.
தலைவரின் ஒவ்வொரு படமும் அனிக்கு எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். வேட்டையன் படத்திற்கு நன்றி ராக்ஸ்டார். வேட்டையன் படத்தில் ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா மற்றும் அபிராமி போன்ற அர்ப்பணிப்புள்ள மற்றும் திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி! சினிமா என்பது ஒரு குழுப்பணி என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். வேட்டையன் படத்தில் பணிபுரிந்த எனது குழுவினருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் அன்பும் மரியாதையும்” என குறிப்பிட்டுள்ளார்.