My first film in Diwali Race – Harish Kalyan | தீபாவளி ரேசில் எனது முதல் படம்

சென்னை,
பார்க்கிங், லப்பர் பந்து என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார். அவரது ‘டீசல்’ படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது. ஆக்சன், திரில்லர் கதையாக உருவான ‘டீசல்’ படத்தை சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து பீர் கானா பாடல் வெளியாக வரவேற்பை பெற்றது.
‘டீசல்’ படம் குறித்து ஹரிஷ் கல்யாண் கூறும்போது, “இது 2014-ம் ஆண்டுக்குள் நடக்கும் கதைக்களம். டீசல் திருட்டை மையப்படுத்தி நடக்கும் இக்கதைக்களத்தில் பல உண்மை சம்பவங்களை காட்சிப்படுத்தி இருக்கிறோம். என் படம் தீபாவளிக்கு களமிறங்குவது இதுவே முதல்முறை. திட்டமிட்டு நடக்கவில்லை. ஏதேச்சையாக அமைந்தது. பார்க்கிங், லப்பர் பந்து வரிசையில் இந்த படமும் ஹாட்ரிக் வெற்றிபெற வேண்டும் என்பதே என் ஆசை. படம் சிறப்பாகவே தயாராகி இருக்கிறது.
அதுல்யா ரவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தது நல்ல அனுபவம். அவரும் படத்தின் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரம். அவரது நடிப்பும் படத்தில் பெரியளவில் பேசப்படும். இந்த படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு செல்லும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஆச்சரியத்துடன் செல்வது உறுதி” என்றார்.