Mahua Moitra admits she has a big crush on Pankaj Tripathi| நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா காதலித்த நடிகர் யார் தெரியுமா?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான மஹுவா மொய்த்ரா தனது கிரஷ் யார் என்பது குறித்து ஜாலியாக பேசியிருக்கிறார். மேலும் அவரை சந்திக்க விரும்பி அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது குறித்தும் கூறியிருக்கிறார்.
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பியான மஹுவா மொய்த்ராவின் நாடாளுமன்ற உரைக்கு என்ற தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. மத்திய பாஜக அரசுக்கு எதிராக அவர் முன்வைக்கும் வாதங்கள் நாடாளுமன்றத்தை தெறிக்கவிடும். அப்படியாக அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் மஹுவா மொய்த்ராவின் மற்றொரு பக்கம் குறித்து அவரே பேசியிருக்கிறார்.
அதாவது அவர் பாலிவுட் நடிகர் ஒருவரை காதலித்தது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். இது தொடர்பாக மஹுவா மொய்த்ராவிடம் ‘உங்கள் கிரஷ் யார்?’ என்பது குறித்து கேட்டதற்கு பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி என பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், “நான் நிறைய பாலிவுட் படங்களை பார்ப்பேன். ‘முன்னா பாய்’ படத்தை திரும்ப திரும்ப பார்ப்பேன். விக்கி டோனர் பிடித்த படம். எனக்கு பங்கஜ் திரிபாதி மிகவும் பிடிக்கும். அவர் நடித்த ‘மிர்சாபூர்’ தொடரை முழுமையாக பார்த்திருக்கிறேன். அவர் என்னுடைய கிரஷ். நான் அவருக்கு காதல் கடிதம் ஒன்றை கூட எழுதி அனுப்பியிருக்கிறேன். ஆனால் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. மிர்சாபூர், கேங்க்ஸ் ஆப் வசேபூர் போன்ற கேங்க்ஸ்டர் படங்களில் அவரின் வில்லத்தனமான நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
நான் அவரின் மிகப்பெரிய ரசிகை. அவரை நேரில் சந்தித்து, அவருடன் காபி குடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. எனக்கு தெரிந்த நண்பர் அவரை இன்டர்வியூ எடுக்க செல்வதாக சொன்னார். அவரிடம் நான் எழுதிய கடித்ததை கொடுத்து பங்கஜ் திரிபாதி கையில் ஒப்படைக்க சொன்னேன். நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கிஷன் மூலம் பங்கஜ் திரிபாதியிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு அவரிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். பேச வார்த்தைகளே இல்லை” என கூறியுள்ளார்.