Kerala HC quashes State Govt order legalising actor Mohanlal’s possession of elephant tusks | யானை தந்தங்கள் வைத்திருந்த வழக்கு

நடிகர் மோகன்லாலுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர், 2012-ம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது எர்ணாகுளத்தில் உள்ள அவர் வீட்டில் இருந்து 4 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. அதை வருமான வரித்துறையினர், வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மோகன்லால்,அவருக்கு யானை தந்தங்கள்கொடுத்த திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை வைத்தார். இதையடுத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அவரிடம் மீண்டும் தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதனால் வனத்துறை வழக்கை ரத்து செய்தது.
இதை எதிர்த்து பவுலோஸ் என்பவர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. யானை தந்தம் வைத்திருப்பதற்கான முறையான அனுமதி தன்னிடம் இருக்கிறது என்றும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் மோகன்லால் மனுதாக்கல் செய்திருந்தார். விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் இறுதி அறிக்கையை பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், நடிகர் மோகன்லாலின் வீட்டில் உள்ள யானைத் தந்தங்களுக்கு 2016 ஆண்டு கேரள அரசு வழங்கிய உரிமத்தை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. எனினும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புதிய அறிவிப்பாணையை கேரள அரசு வெளியிட எந்த தடையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.






