“Kandhara” film will prevent religious conversion of tribals – Kangana Ranaut | “காந்தாரா” படம் பழங்குடியின மதமாற்றத்தை தடுக்கும்

கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘கேங்ஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கங்கனா ரனாவத். இப்படம் அபார வெற்றி பெற்றது அதுமட்டுமின்றி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான ‘தலைவி’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவான ‘எமர்ஜென்சி’ படத்தில் நடித்திருந்தார்.இமாசல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத்.
கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா சாப்டர் 1’ படம் கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பழங்குடிகள் – மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
சமீபத்தில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார். பின்பு இந்தியக் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் படத்தை பாராட்டி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத் படத்தை பாராட்டியுள்ளார். எக்ஸ் வலைதளத்தில் ஒரு பயனரின் பதிவிற்கு கமெண்ட் தெரிவித்த அவர் படத்தை பாராட்டும் வகையில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். முதலில் அந்த ரசிகர், இமயமலையில் வாழும் மக்கள் கொண்டாடும் ஒரு விழாவின் வீடியோவை பகிர்ந்து, “காந்தாரா படத்தில் காட்டியது நிஜம். இந்தப் படத்தைப் பார்க்கும் வரை, எனக்கு தென்னிந்தியாவைப் பற்றித் தெரியாது, ஆனால் என்னை நம்புங்கள், இமயமலையில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை உணர்ந்திருக்கிறார்கள். மேலும் அதை பார்த்திருக்கிறார்கள். இங்குள்ள தேவ கலாச்சாரம் உண்மையிலேயே தெய்வீகமானது, மேலும் இந்தப் படம் இந்து மதத்தின் பரந்த தன்மையையும், மக்கள் தெய்வங்களுடன் கொண்டிருக்கும் ஆழமான தொடர்பையும் அழகாகக் காட்டுகிறது. இவ்வளவு ஒரு அற்புதமான படத்தை கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் ரிஷப் ஷெட்டி” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள கங்கனா ரனாவத், “இது போன்ற படங்கள் பழங்குடியின மதமாற்றத்தைத் தடுப்பதற்கும் முக்கியமானதாக அமையும்” என பதிவிட்டுள்ளார்.