International recognition for cinematographer Ravi Varman

தமிழில் ஆட்டோகிராப், அந்நியன், தசாவதாரம், வேட்டையாடு விளையாடு, பொன்னியின் செல்வன், இந்தியில் பிர் மிலேங்கே, பார்பி, சஞ்சு உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ரவிவர்மன். இப்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ்’ கம்பெனி படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
ரவிவர்மன் அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினராக இணைந்துள்ளார். பல ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒளிப்பதிவாளர்கள் ஒன்று கூடி மற்ற ஒளிப்பதிவாளர்களின் வேலைகளைப் பார்த்து அவர்களின் தரத்தை மதிப்பீடு செய்த பிறகுதான் கூட்டமைப்பாக இந்த அங்கீகாரத்தை வழங்குவார்கள். தேசிய விருது மட்டுமல்லாமல் பல உயரிய பாராட்டுக்களைப் பெற்றுள்ள ரவி வர்மன், மிகப்பெரியதாக மதிக்கப்படும் அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினரானதற்கு திரை துறையினர் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி ரவிவர்மனிடம் கேட்டபோது, “உலகம் எங்கும் இருக்கும் ஒளிப்பதிவாளர்கள், இந்தச் சங்கத்தில் இணைவதைக் கனவாகக் கொண்டிருப்பார்கள். ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வென்ற உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் உறுப்பினர்களாக இயங்கும் தளத்தில் நானும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது” என்றார்.
அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினராகும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ரவிவர்மன் பெற்றுள்ளார். இதற்கு முன் சந்தோஷ் சிவன் மட்டுமே இந்தச் சங்கத்தின் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஆஸ்கர் விருதுகளை நடத்தி வரும் அகடாமி குழுவில் கடந்த ஆண்டு ரவிவர்மன் உறுப்பினராக இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.