I saw first Tamil film “Baashha” – Fahadh Faasil | நான் பார்த்த முதல் தமிழ் படம் “பாட்ஷா”

சென்னை,
வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து ‘மாரீசன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், எழுதி, கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி உள்ளார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ‘மாரீசன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை வரைக்கும் வந்து, அங்கிருந்து கோயம்புத்தூருக்கு பகத், வடிவேலு இருவரும் பைக்கில் பயணமாவதுதான் கதை. திருடனாக இருக்கும் பகத், வடிவேலுவிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்க அவருடனே செல்ல நேரிடுகிறது. அடிக்கடி எல்லாவற்றையும் மறந்துவிடும் மறதியுடைய வடிவேலுவுடன் பகத் மாட்டிக்கொண்டு எப்படியெல்லாம் தவிக்கிறார். இருவருக்குமிடையே என்னவெல்லாம் நடக்கிறது. இந்தப் பயணம் இருவரின் வாழ்வை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதுதான் இதன் கதைக்களம்.
இதன் வெளியீட்டையொட்டி பிரபல சேனலுக்குப் பேட்டியளித்திருக்கும் பகத் பாசில் தான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம் குறித்து பகிர்ந்துகொண்டிருக்கிறார். இதுகுறித்துப் பேசியிருக்கும் பகத், “கல்லூரி படிக்கும்போது கட் அடித்துவிட்டு நான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம் ‘பாட்ஷா’, ரஜினிசார் படம்தான். ‘பாட்ஷா’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் அருமையாகக் கட்டமைக்கப்பட்டு ரஜினி சாரின் காட்சிகளெல்லாம் புல்லரிக்க வைக்கும். அதுவும் தங்கச்சிக்கு கல்லூரியில் அட்மிஷன் போடும் காட்சி மிக அற்புதமாக இருக்கும். ‘என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்றெல்லாம் சொல்லிவிட்டு, அட்மிஷன் போட்டுவிட்டு வெளியே வந்தவுடன் ‘அட்மிஷன் கெடச்சாச்சு’ எனச் சொல்வார். அதற்கு தங்கச்சி, ‘என்ன சொன்னீங்க’ எனக் கேட்க, க்ளோஸ் அப் ஷாட்டில் ‘உண்மையச் சொன்னேன்’ என ரஜினி சார் சொல்லும்போது பிரமித்துப் போனேன். ரஜினி சார் படத்தில் ரசிகர்களைப் பார்த்து பேசுவதுபோல நடித்திருப்பதெல்லாம் என்னை ரொம்ப வியக்க வைத்திருக்கிறது.
கல்லூரியில் கோயம்புத்தூர், தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் என்னுடன் படித்ததால் தமிழ் பழகிவிட்டேன். அதனால், நிறையத் தமிழ்த் திரைப்படங்களும் பார்க்கத் தொடங்கிவிட்டேன். ரஜினிசாரின் ‘பாட்ஷா’தான் நான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம்” என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.