I have great respect for Malayalam cinema – Actress Trisha | மலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கிறது

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷாவும், மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸும் இணைந்து நடித்துள்ள படம் ‘ஐடென்டிட்டி’. இந்த படத்தில் வினய் ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை அகில் பால், அனஸ்கான் இயக்கியுள்ளனர். இவர்களது கூட்டணியில் கடந்த 2020 ம் ஆண்டு வெளியான ‘பாரின்ஸிக்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி ‘ஐடென்டிட்டி’ திரைப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்படத்தினை ராகம் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் டோவினோ தாமஸ் 2 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தெரிகிறது. அதன்படி மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
ஒரு குற்றத்தை நேரில் பார்க்கும் திரிஷா குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவுகிறார். அந்த குழுவில் படம் வரையும் ஆளாக இருக்கிறார் டோவினோ தாமஸ். குற்றவாளி யார் கதையின் பின்னணி என்ன என்பதை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படம் கடந்த 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரிஷா, மலையாள சினிமா மீது எப்போதும் ஒரு மரியாதை இருந்து கொண்டே இருக்கும். மலையாள படங்கள் பெரும்பாலானவை புத்திசாலித்தனமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். ஒரு வருடத்தில் எப்படியாவது ஒரு மலையாள படத்தில் நடித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைக்க இப்போதுதான் நடித்திருக்கிறேன்” என்று நெகழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
தமிழ் திரை உலகில் 22 ஆண்டுகளாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் திரிஷா. இவர் தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது அஜித்துடன் ‘விடாமுயற்சி, குட் பேட் அக்லி’ மற்றும் கமலின் ‘தக் லைப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா’ படத்திலும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், ஆர்.ஜே.பாலாஜி நடிகர் சூர்யாவை வைத்து இயக்கி வரும் ‘சூர்யா 45’ படத்தில் நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.