Even after 28 years, the movie “Suryavamsam” is being celebrated – Sarathkumar| 28 ஆண்டுகளுக்கு பிறகும் “சூர்யவம்சம்” படம் கொண்டாடப்படுகிறது- சரத்குமார்

சென்னை,
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் காலம் கடந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்து நிற்பதென்றால் அது ‘சூரியவம்சம்’ தான். சரத்குமார், தேவயானி உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் சூர்யவம்சம் திரைப்படம் கடந்த 1997-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருந்தார். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டாகின. தந்தை – மகன் இடையிலான உறவுதான் படத்தின் மையக்கருவாக அமைந்திருக்கும். இவர்களைத் தவிர்த்து, மணிவண்ணன், சுந்தர் ராஜன், ஆனந்தராஜ், பிரியா ராமன், ஜெய் கணேஷ், அஜய் ரத்னம் உள்ளிட்டோர் தங்களது கேரக்டர்களை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றனர்.
90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த படமான சூர்ய வம்சம்,மீம் கிரியேட்டர்களுக்கு தொடர்ந்து கன்டென்டுகளை கொடுத்து வருகிறது.ஞாயிற்று கிழமை வந்து விட்டால் சின்னராசை கையில் பிடிக்க முடியாது, ராதிகா பேசும் டயலாக் உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் மீம்ஸ்களாக ரசிக்கப்பட்டன. சூர்யவம்சத்தில் இடம்பெற்ற ரோஜாப்பூ சின்ன ரோஜாப்பூ, சலக்கு சலக்கு சருகை சேல என எல்லா பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்.
தமிழில் வெற்றியடைந்த இந்த படம் பின்னர் தெலுங்கு, இந்தி, கன்னடம் என்று மூன்று மொழிகளில் ரீ மேக் செய்யப்பட்டது. தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடிக்க ‘சூர்யா’ என்ற பெயரிலும், இந்தியில் அமிதாப்பச்சன், சௌந்தர்யா நடிக்க ‘சூர்ய வன்ஷம்’ என்ற பெயரிலும், கன்னடத்தில் விஷ்ணுவர்தன், இஷா கோபிகர் நடிக்க ‘சூர்ய வம்சா’ என்ற பெயரிலும், இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
28 ஆண்டுகளுக்குப் பிறகும் நான் நடித்த ‘சூர்ய வம்சம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று “3 பிஎச்கே” பட விழாவில் நடிகர் சரத்குமார் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.