Desire to act in “Maaveeran” 2nd part – Sivakarthikeyan | “மாவீரன்” 2ம் பாகத்தில் நடிக்க ஆசை

சென்னை,
தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.
இத்திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இப்படத்தின் ‘சலம்பல’ பாடல் யூடியூப்-ல் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார்.
சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார் சிவகார்த்திகேயன். அங்கு பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் “உங்களுடைய படங்களில் எதன் 2-ம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?” என்று சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், “ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்கவே பயம். அது ரொம்ப நல்ல கதையாக அமைய வேண்டும். முதல் பாகத்தின் வெற்றியை எந்தவிதத்திலும் பாதிக்கக் கூடாது. ஆனால் ‘மாவீரன்’ படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க ஆசை. அந்தக் கதை ரொம்பவே தனித்தவமானது. ஆகையால் அதை முயற்சிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாவீரன்’. அருண் விஷ்வா தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.