Dadasaheb Phalke Award is a tribute to Malayalam cinema’s creativity – Mohanlal | தாதா சாகேப் பால்கே விருது மலையாள சினிமா படைப்பாற்றலுக்கு கிடைத்த மரியாதை

71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது. தேசிய விருதுக்குத் தேர்வான கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வாழ்நாள் சாதனைக்கான தாதா சாகேப் பால்கே விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். அப்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்ப மிகுந்த நெகிழ்ச்சியுடன் மோகன்லால் விருதைப் பெற்றுக்கொண்டார். பின்னர் மோகன்லாலின் திரைப்பயணம் குறித்த சிறப்பு காணொலி ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது. விருது வழங்குவதற்கு முன்னதாக மோகன்லாலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சால்வை அணிவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் மோகன்லால் பேசியதாவது, “மலையாளத் திரைப்படத் துறையின் பிரதிநிதியாக, இந்த தேசிய அங்கீகாரத்தை பெற்றுக்கொள்கிறேன். மாநிலத்திலிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெறும் இளைய மற்றும் இரண்டாவது நபராக பணிவுடன் இந்த விருதை ஏற்கிறேன். இந்த தருணம் என்னுடையது மட்டுமல்ல. ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்கும் சொந்தமானது.இந்த விருதை மலையாள சினிமாவின் பெருமை, மரபு, படைப்பாற்றலுக்கு கிடைத்த ஒட்டுமொத்த மரியாதையாகப் பார்க்கிறேன்..தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ளதாக மத்திய அரசிடமிருந்து அழைப்பு வந்ததும் வெறுமனே பெருமை அடையவில்லை பதிலாக, எங்கள் சினிமா பாரம்பரியத்தின் குரலாக என்னைத் தேர்வு செய்துள்ளதாகப் பெருமிதமடைந்தேன்.தங்கள் இலக்கு மூலமும் கலைத்திறன் மூலமும் மலையாள சினிமாவை முன்னகர்த்திச் சென்றவர்களின் சார்பாக நான் இந்த விருதைப் பெற்றுக்கொள்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் இந்த தருணத்தை கனவு காணக் கூட நினைத்ததில்லை” என மோகன்லால் பேசினார்.
மோகன்லால் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மோகன்லால் நடிப்பில் ‘தன்மாத்ரா’’, ‘திரிஷ்யம்’, ‘வனபிரஸ்தம்’, ‘முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல்’, ‘புலிமுருகன்’ ஆகியவை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களாகும்
சிறந்த நடிகருக்கான 2 தேசிய திரைப்பட விருதுகள், 9 கேரள மாநில விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளையும் மோகன்லால் பெற்றுள்ளார். மேலும் மோகன்லாலுக்கு 2001-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2019-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.