Bigg Boss Kannada 12 studio reopens after deputy CM intervenes in sealing row

பெங்களூரு,
தமிழ், கன்னடா, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ‘பிக்பாஸ்’ எனப்படும் ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகைகள், சமூகவலைதள பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். கர்நாடகாவிலும் பிக்பாஸ் நிகச்சி மிகவும் பிரபலமாகும். அம்மாநிலத்தில் நடிகர் கிச்சா சுதீப் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடானி பகுதியில் பிரமாண்ட ஸ்டூடியோ அமைக்கப்பட்டுள்ளது.
கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் ஸ்டூடியோவை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தண்ணீர், காற்று மாசு தொடர்பான உரிய அனுமதியை பெறாமல் ஸ்டூடியோ அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், ஸ்டூடியோவை உடனடியாக மூட மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கே தங்கி இருந்த 17 போட்டியாளர்கள் மற்றும் 500க்கும் அதிகமான படப்பிடிப்பு கலைஞர்களை வெளியேற்றி மாசு கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்தது. இதனையடுத்து, போட்டியாளர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த சூழலில் தான் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வினை கண்டு இருக்கிறார் . இது தொடர்பாக துணை முதலமைச்சர் சிவக்குமார் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் “தெற்கு பெங்களூருவின் துணை ஆணையரை நான் தொடர்பு கொண்டு இருக்கிறேன் , ஜாலிவுட் ஸ்டுடியோவிற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றுமாறு நான் கூறியிருக்கிறேன். சுற்றுச்சூழல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதற்கு தான் முதல் முன்னுரிமை தற்போதைக்கு ஜாலிவுட் நிறுவனத்திற்கு நிறுவனத்தின் மீது என்னென்ன புகார்கள் முன்வைக்கப்பட்டு இருக்கிறதோ அவற்றையெல்லாம் அவர்கள் சரி செய்வதற்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் என கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கர்நாடகாவில் இந்த பொழுதுபோக்கு அம்சங்கள் தொடர்ந்து நடைபெறுவது மாநிலத்தின் முதலீடு சம்பந்தப்பட்ட பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முக்கியம் என்றும் அதேவேளையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் அரசு கவனமாக இருக்கிறது ” என தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து, கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் மாவட்ட அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணியளவில் பிக் பாஸ் ஸ்டுடியோவுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி, மீண்டும் திறந்தனர். தற்போது வழக்கமான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதனை அடுத்து நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுதீப் துணை முதலமைச்சர் டி கே சிவகுமாருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் .
சுற்றுச்சூழல் மட்டுமல்லாது கலாச்சாரத்திற்கும் கேடான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.