Best roles for me in South Indian movies – Actress Genelia | தென்னிந்திய திரைப்படங்களில் எனக்கு சிறப்பான கதாபாத்திரங்கள்

நடிகை ஜெனிலியாவின் திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. தமிழில் ‘பாய்ஸ்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘உத்தமபுத்திரன்’, ‘வேலாயுதம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஜெனிலியா. இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து உச்ச நடிகையாக உயர்ந்தார்.
சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். 2 குழந்தைகள் உள்ளனர். பின்னர் சினிமாவில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொண்ட அவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.
பாலிவுட்டில் அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி இருக்கும் இப்படம் நாளை வெளியாக உள்ளது. ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள ‘ஜூனியர்’ படத்திலும் ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஜூலை 18-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், தென்னிந்திய திரைப்படங்களில் சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைத்ததா? என நேர்காணல் ஒன்றில் கேட்ட கேள்விக்கு நடிகை ஜெனிலியா “தென்னிந்திய திரைப்படங்களில் எனக்கு மிக சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. நான் கற்றுக் கொண்ட இடம் அதுதான். அங்கு பணிபுரிந்ததற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் ஹைதராபாத்திற்கு சென்றாலும் ஹாசினியை அவர்களுக்கு தெரியும். அந்த கதாபாத்திரங்கள் கிடைத்ததற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என்றார்.