Ban on using Ilayaraja songs affects the film “Good Bad Ugly” – Mythri Movie Makers | இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால் “குட் பேட் அக்லி” படத்திற்கு பாதிப்பு

Ban on using Ilayaraja songs affects the film “Good Bad Ugly” – Mythri Movie Makers | இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால் “குட் பேட் அக்லி” படத்திற்கு பாதிப்பு


அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் ‘ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றிருந்தது.இப்பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் அதற்கு நஷ்ட ஈடாக ரூ.5 கோடி தர வேண்டும் என்றும், இளையராஜா தரப்பில் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இளையராஜா நோட்டிஸிற்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் பதில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அதில் சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம் இருந்து பாடல்களுக்கு அனுமதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை என தெரிவித்து இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தும் படத்தில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் இளையராஜா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதாக படக்குழுவிற்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தார். இதையடுத்து பாடல்கள் நீக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் படமே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டது. இது தொடர்பாக இளையராஜா பதிலளிக்க உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த தடையை நீக்கக் கோரி மனுத்தாக்கல் செய்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களின் உரிமையை, சோனி நிறுவனத்திடம் இருந்து பெற்று பயன்படுத்தியதாகவும், தற்போது இளைராஜா இசையமைத்த சம்பந்தப்பட்ட பாடல்களை குட் பேட் அக்லி திரைப்படத்தில் இருந்து நீக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி சோனி நிறுவனம் சார்பில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது, இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது இன்னும் பட்டியலிடப்படவில்லை எனக் கூறினார். அப்போது, ‘குட் பேட் அக்லி’ படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூன்று பாடல்களையும் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதையடுத்து, மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 23ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *